

தமிழகத்தில் கரோனா இல்லாத 4 ஆயிரம் பேருக்கு தொற்று இருப்பதாக தவறான தகவலை பதிவு செய்த தனியார் ஆய்வகம் மீது சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் 69 அரசு மருத்துவமனைகள் மற்றும் 198 தனியார்மருத்துவமனைகள், ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை (ஆர்டிபிசிஆர்) செய்யப்படுகிறது. இதுவரை செய்யப்பட்டுள்ள 2.59 கோடி பரிசோதனைகளில் 17.70லட்சம் பேருக்கு கரோனா தொற்றுஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமும் 1.70 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இந்நிலையில், ‘மெட் ஆல்’ என்ற தனியார் ஆய்வகம், தொற்று இல்லாத 4 ஆயிரம் பேருக்கு தொற்று இருப்பதாக தவறான தகவலை பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக ‘மெட் ஆல்’ தனியார் ஆய்வக நிர்வாக இயக்குநருக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் அவர் கூறி யிருப்பதாவது:
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை, தமிழகத்தின் கள்ளக்குறிச்சியிலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இணையப் பக்கத்தில் ஆய்வகம் தவறாக பதிவேற்றியுள்ளது.
இவைதவிர, தமிழகத்தில் கரோனா இல்லாத 4 ஆயிரம்பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக தவறான விவரங்களை ஆய்வகம் பதிவு செய்துள்ளது. இந்த செயல்பாடு மிகப்பெரிய பாதிப்பை சமூகத்திலும், சுகாதாரத் துறையிலும் ஏற்படுத்தும் வகையில் அமைந் துள்ளது.
திட்டமிட்ட செயலா?
அர்ப்பணிப்புணர்வோடு கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தப் போராடி வரும் முன்களப் பணியாளர்களின் முயற்சிகளை சீரழிக்கும் விதமாக இத்தகைய செயலில் ஆய்வகம் ஈடுபட்டிருக்கிறது. இது அலட்சியத்தால் நிகழ்ந்ததவறா? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலா? என்பதை கண்டறிய வேண்டியுள்ளது.
கரோனா இல்லாதவர்களுக்கு தொற்று இருப்பதாக கணக்கு காட்டியிருப்பது சம்பந்தப்பட்ட ஆய்வகத்துக்கும், சில மருத்துவ மனைகளுக்கும் விதிகளை மீறிய தொடர்பு இருப்பதை உணர்த்துகிறது. தொற்று இல்லாத மக்களையும் மருத்துவமனைக்கு அழைத்து அதன் வாயிலாக பணம் ஈட்டும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.
கரோனா பரிசோதனை அனுமதி ரத்து
இந்தச் செயலில் ஈடுபட்டதால் ஆய்வகத்துக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான அனுமதி ரத்து செய்யப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வகத்தின் மேலாண் இயக்குநர் 3 வாரங்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும். சுகாதாரத் துறை அதிகாரிகள் நேரடி கள ஆய்வு மேற்கொண்டு உண்மை விவரங்களைக் கண்டறிந்த பிறகே கரோனா பரிசோதனைக்கான அனுமதியை மீண்டும் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.