

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிமுழுமையாக தொடங்கப்படாததால், மருத்துவமனைகளுக்கு சென்ற இளைஞர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
‘நாடு முழுவதும் 18 வயதுக்குமேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி மே 1-ல் தொடங்கப்படும். இதற்கு அந்தந்த மாநிலஅரசுகளே தடுப்பூசிகளை கொள்முதல் செய்துகொள்ளலாம்’ என்று மத்திய அரசு தெரிவித்தது. தமிழகத்தில் இதை செயல்படுத்த அப்போதைய முதல்வர் பழனிசாமி 1.50 கோடி தடுப்பூசிகளை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்ய உத்தரவிட்டார்.
தமிழகத்தில் ஏற்கெனவே தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருப்பதாலும், ஆர்டர் கொடுத்த 1.50 கோடி தடுப்பூசிகள் வராததாலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி மே 1-ம் தேதி தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, 1.5 கோடி தடுப்பூசியை மத்திய அரசு மூலமாகவும், எஞ்சிய 3.5 கோடி தடுப்பூசியை உலகளாவிய டெண்டர் மூலமாகவும் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் கடந்த 20-ம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்த சூழலில், சென்னை உட்படதமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகளுக்கு இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் நேற்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தனர். ஆனால், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்எதுவும் இதுவரை தங்களுக்கு வரவில்லை என்று கூறி மருத்துவமனை நிர்வாகிகள் அவர்களை திருப்பி அனுப்பினர். இதனால், பலரும் ஏமாற்றத்துடன் சென்றனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தடுப்பூசி போதிய அளவில் கையிருப்பு இல்லை. அதனால்தான் தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிதொடங்கப்படவில்லை. முதல்கட்டமாக திருப்பூரில் தடுப்பூசி போடும்பணி தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்படும்” என்றனர்.