

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள கரோனா தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகளின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், நேற்று வேறு வார்டுக்கு மாற்ற முயற்சித்ததால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அதிருப்தியடைந்தனர்.
முதல் அலையைக் காட்டிலும் 2-வது அலையில் கரோனா தொற்று தீவிரமெடுத்திருப்பதால், தமிழகத்தில் தொற்று பாதிப்பும், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன.
நடுத்தர குடும்பங்களும், ஏழ்மையானவர்களும் தொற்று பாதிப்புக்கு திருப்பூர் அரசுதலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திருப்பூர் முருகம்பாளையத்தைச் சேர்ந்த 64 வயது பெண் ஒருவர், தீவிர சிகிச்சை பிரிவில் ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வந்த நிலையில், போதிய படுக்கை இல்லாததால் அவரது படுக்கையை மாற்றும் முயற்சியில் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த குடும்பத்தினர், சிகிச்சையில் இருப்பவர்களை எப்படி மாற்றலாம் என கேள்வி எழுப்பினர். இதையடுத்து அருகில் இருந்த மற்றொரு 55 வயது ஆண் தொற்றாளரை வேறு வார்டுக்கு மாற்றி, புதிதாக வந்தவரை அனுமதிக்க ஏற்பாடு செய்தனர். இதில் அவருக்கு ஆக்சிஜன் அளவு திடீரென குறைந்ததால், தொடர்ந்து அதே வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கூடுதல் கவனம் தேவை
இதுதொடர்பாக பாதிக்கப் பட்டவர்கள் கூறும்போது, "கரோனாதொற்று பாதிப்புக்கு பலரும் அரசுமருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள படையெடுக்கிறார்கள். சிகிச்சை எடுப்பவர், சிகிச்சைக்கு வருபவர் என அனைவரின் உயிரும்முக்கியமானது.ஆனால், வார்டில் தீவிர சிகிச்சை பிரிவில் (சாரி) ஆக்சிஜன் வசதியுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவரின் படுக்கையை மாற்றி, வேறு வார்டுக்குமாற்றுவது என்பது மிகவும் மோசமான விஷயம். ஆக்சிஜன படுக்கைக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரிப்பதால், அரசு கூடுதல் கவனத்துடன் ஆக்சிஜன் படுக்கை வசதியை விரிவுபடுத்த வேண்டியது அவசியம்" என்றனர்.
விசாரிக்கப்படும்
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் (பொறுப்பு) மருத்துவர் பாரதி கூறும்போது, "ஆக்சிஜன் படுக்கை கேட்டு நோயாளிகளின் உறவினர்கள் தொடர்ந்து நச்சரிப்பதால், ஊழியர்களும் மன உளைச்சலில் இருக்கிறார்கள். இதனால் ஏதேனும்அப்படி நிகழ்ந்திருக்கலாம். கரோனா வார்டில் நடந்த விஷயம்தொடர்பாக விசாரிக்கிறேன்" என்றார்.