

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த 13 நாட்களில் மட்டும் 1,010 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னையில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது.
சென்னையி்ல் கரோனாவால் கடந்த 19-ம் தேதி நிலவரப்படி 6,031பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 13 நாட்களில் மட்டும் 1,010 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் கரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்பை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
கரோனா அறிகுறி உள்ளதா என ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க 12 ஆயிரம் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தினமும் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். காய்ச்சல் அறிகுறி இருந்தால், அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
தொற்று உறுதியானால் அவர்களை பரிசோதிக்க, முதற்கட்ட உடல் பரிசோதனை மையங்கள் 21 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
வீட்டுத் தனிமையில் இருக்கும் கரோனா நோயாளிகள் வெளியில் வருவதை தடுக்கவும், அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் 2 ஆயிரம் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது மாநகராட்சி சார்பில் மட்டும் தினமும் 19 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அதை 25 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் மூலம் வரும் நாட்களில் தொற்று படிப்படியாக குறையும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.