

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விழுப்புரம் இளைஞர் பிடிபட்டுள்ளார்.
நேற்று காலை 9.52 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு (100) அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், ‘முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும்’ என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கட்டுப்பாட்டு அறை போலீஸார், உடனடியாக இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். ஆனால், வெடி பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.
இதையடுத்து மிரட்டல் விடுத்த செல்போன் எண் அடிப்படையில் மிரட்டல் விடுத்தது விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த புவனேஷ்வர் என்பது தெரியவந்தது. அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இதையடுத்து அவரது பெற்றோரை அழைத்து போலீஸார் எச்சரித்து அனுப்பி உள்ளனர்.
இவர் ஏற்கெனவே முன்னாள் முதல்வர் பழனிசாமி வீடு, புதுச்சேரி முதல்வர் வீடு உட்பட பல்வேறு முக்கிய நபர்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.