

சென்னை முழுவதும் பலத்த காற்றுடன் நேற்று பரவலாக மழை பெய்தது.
சென்னையில் கடந்த பல நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. அரபிக்கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்தபோதிலும் சென்னையில் மட்டும் மழை பெய்யாமல் இருந்தது.
இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் விதமாக நேற்று முன்தினம் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் நேற்று காலை முதலே சென்னை மாநகரம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் பல இடங்களில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.
சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் நீடித்த மழை காரணமாக அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியது. சென்னையில் தற்போது ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால், மழையால் சாலைகளில் வாகன நெரிசல் ஏற்படவில்லை.
அதேநேரத்தில் பலத்த காற்று காரணமாக சாலைகளில் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.
தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியது, பலத்த காற்று, மரக்கிளைகள் முறிந்து விழுந்ததன் காரணமாக மாநகரின் ஒருசில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
மேற்கு தாம்பரத்தில் 59 மிமீ, சோழிங்கநல்லூரில் 19 மிமீ, நுங்கம்பாக்கத்தில் 9 மிமீ, வில்லிவாக்கத்தில் 7 மிமீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.