

திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆகவே, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆகியவை சார்பில், மாவட்டத்தில் முதல்முறையாக, பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்தில், கரோனா தொற்றாளர்களுக்காக சித்தா, ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சித்தா மருத்துவத்துக்கு 50 படுக்கைகள், ஆயுர்வேத மருத்துவத்துக்கு 50 படுக்கைகள் என, 100 படுக்கை வசதிகள் கொண்ட இந்த இலவச சிகிச்சை மையத்தை நேற்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 60 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்து ஆய்வு செய்தார்.
பிறகு, பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில், 21 வாகனங்கள் மூலம் நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி, வீடுதோறும் சென்று காய்ச்சல் கணக்கெடுக்கும் பணி, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி உள்ளிட்டவற்றை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வுகளின் போது,செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்ததாவது:
தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 1,000 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும். இதில் முதல்கட்டமாக 200 படுக்கைகள் ஓரிரு நாட்களில் பயன்பாட்டுக்கு வர உள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, குடும்பநலம் மற்றும் ஊரக நலப் பணிகளுக்கான இணை இயக்குநர் ராணி, சுகாதாரப் பணிகளுக்கான துணை இயக்குநர் ஜவஹர்லால், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அய்யாசாமி, பூந்தமல்லி நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், பூந்த மல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேசிங்கு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.