

புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் பதவியேற்காமல் இருப்பதற்கு பாஜகதான் காரணம் என்று விசிக எம்.பி. ரவிக்குமார் ட்விட்டரில் பதிவிட்டு இருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று புதுச்சேரி பாஜக விமர்சித்துள்ளது.
புதுச்சேரி பாஜக சட்டப்பேரவைத் தலைவர் நமச்சிவாயம் இன்று விடுத்துள்ள அறிக்கை:
''புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்காமல் இருப்பதற்கு பாஜகதான் காரணம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ட்விட்டரில் பதிவிட்டு இருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது.
புதுச்சேரி முதல்வராகப் பதவியேற்ற ரங்கசாமி கரோனா நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காரணத்தினால்தான் அமைச்சர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் பொறுப்பேற்க முடியவில்லை என்பதைப் புதுச்சேரி மக்கள் அனைவரும் அறிவர். சமூகப் பொறுப்புள்ள எழுத்தாளராக இருக்கின்ற ரவிக்குமார் சம்பந்தமே இல்லாமல் பாஜக மீது அபாண்டமாக வீண் பழி சுமத்துவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
தமிழகத்திலும் புதுவையிலும் கரோனா எனும் கொடிய நோயினால் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த தர்மசங்கடமான சூழ்நிலையில் பாஜக மீது வீண் பழி சுமத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். புதுச்சேரி மக்களால் புறக்கணிக்கப்பட்ட காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார், பாஜகவை விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அரசியல் சுய லாபத்திற்காக பாஜகவைத் தொடர்ந்து விமர்சிப்பது பொறுப்பற்ற செயலாகும்.
புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எவ்வளவு தடை வந்தாலும் அதைத் தகர்த்தெறிந்து நல்லாட்சி தரும். முதல்வர் நோய்த் தொற்றில் இருந்து விடுபட்டு சகஜ நிலைமைக்குத் திரும்பியவுடன், அமைச்சர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவி ஏற்பார்கள். அதன் பிறகு அரசியல் உள்நோக்கத்தோடு பாஜகவை விமர்சிக்கும் ரவிக்குமார் உள்ளிட்டவர்களின் சுயரூபம் புதுச்சேரி மக்களுக்கு வெகுவிரைவில் புலப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்குள் சிண்டு முடியும் வேலையை நிறுத்திக்கொண்டு கரோனா எனும் கொடும் நோயினால் அவதிப்பட்டு வரும் மக்களுக்கு உதவி செய்வதில் அக்கறை காட்டுங்கள்".
இவ்வாறு நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.