

மதுரை அரசு மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் கரோனா வார்டில் பணிபுரிந்த 12 மருத்துவர்கள், 4 செவிலியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மதுரை மட்டுமில்லாது தென் மாவட்டங்களில் இருந்து பரிந்துரைக்கப்படும் கரோனா நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர்.
குறைவான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை கொண்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கரோனா வார்டு மருத்துவக்குழுவினர் நோயாளிகளை குணப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர்.
ஆனாலும், சிலர் தினமும் பல்வேறு பக்க நோய்கள், தாமதமாக சிகிச்சைக்கு வருதல் போன்ற காரணங்களால் இறக்கின்றனர்.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது நோயாளிகளால் மருத்துவர்கள், மருத்துவப் பட்டமேற்படிப்பு மாணவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கும் கரோனா தொற்று தற்போது அதிகளவு ஏற்படுகிறது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 12 மருத்துவர்கள், 4 செவிலியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல் அலையில் வழங்கப்பட்ட தரமில்லாத பிபிகிட், முககவசம் தற்போதும் வழங்கப்படுவதால் அவற்றை அணிவதாலேயே முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் அதிகம் கரோனா தொற்றுக்கு ஆளாகுவதாகப் புகார் எழுந்துள்ளது.
அவர்களுக்கு உடனடியாக புதிதாக தரமான பிபிஇ கிட், முகக்கவசம் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகமும், மருத்துவமனை நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.