

திருப்பத்தூர் மாவட்டத்தில் இம்மாதம் இறுதிக்குள் கூடுதலாக 10 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 630 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,957 ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,140 பேர் அரசு மருத்துவமனைகள் மற்றும் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், முழுமையாக குணமடைந்த 431 பேர் இன்று வீடு திரும்பினர். சிகிச்சை பலனின்றி இன்று 6 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை 256 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர மாவட்டம் முழுவதும் 630 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 480 தெருக்களில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் வெளியே வர முடியாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கரோனா பரவலைக் குறைக்க தடுப்பூசி போடுவது அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை முதல் தவணை தடுப்பூசி 59 ஆயிரம் பேருக்கும், 2-ம் தவணை தடுப்பூசி 19 ஆயிரத்து 500 பேருக்கும் போடப்பட்டுள்ளதாகவும், நோய்ப் பரவல் அதிகமாகக் கண்டறியப்படும் பகுதிகளில் கரோனா தடுப்பூசி போடும் முகாமை நடத்தி தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இம்மாதம் இறுதிக்குள் கூடுதலாக 10 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்குத் தகுந்தாற்போல் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நல்லதம்பி (திருப்பத்தூர்), தேவராஜ் (ஜோலார்பேட்டை), அ.செ.வில்வநாதன் (ஆம்பூர்), வட்டார மருத்துவ அலுவலர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் தலைமையில் சுகாதாரத்துறையினர், அங்கன்வாடி பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் கொண்ட குழுவினர் ஒவ்வொரு கிராமம் மற்றும் வார்டு வாரியாகச் சென்று, கரோனா குறித்த விழிப்புணர்வும், கரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதேபோல, நோய்ப் பரவல் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் துறையினருக்கு ஆட்சியர் சிவன் அருள் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், முழு ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் வெளியே சுற்றி வரும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறையினருக்கு ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார்.