அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் நீக்கம்

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் நீக்கம்
Updated on
1 min read

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் நீக்கப்பட்டுள்ளார். கடந்த ஆட்சியின்போது வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்ற அவர், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமாக இருந்தார்.

இந்நிலையில், இன்று அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார்.
இது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் நிலோபர் கபீல் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் அவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலோபர் கபீல் அதிமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்பு, திருப்பத்தூர் மாவட்ட அதிமுக துணைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை கட்சியில் வகித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீட் மறுப்பும் அதிருப்தியும்..
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நிலோபர் கபீலுக்கு சீட் மறுக்கப்பட்டது. இதனால், அவர் அதிருப்தியில் இருந்தார். இருப்பினும் தேர்தலில் 'சீட்' மறுக்கப்பட்டாலும் கட்சி தலைமை அறிவித்த வேட்பாளரின் வெற்றிக்கு நிச்சயம் உழைப்பேன் என வெளியில் கூறிவந்தார்.

ஆனால், "திருப்பத்தூர் அதிமுக மாவட்டச் செயலாளராக இருக்கக்கூடிய அமைச்சர் கே.சி.வீரமணி திட்டமிட்டே எனக்கு சீட் தரக்கூடாது என கட்சி தலைமைக்கு தெரிவித்துள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கும், அமைச்சர் கே.சி.வீரமணிக்கு ரகசிய உடன்பாடு உள்ளது. அவர்களுக்கு 'மாமன்', 'மச்சான்' உறவு இருப்பது தற்போது வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு வெளிச்சத்துக்கு வந்துள்ளது" என்று பேசினார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அப்போதிலிருந்து கட்சித்தலைமை அவர் மீது அதிருப்தியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

பண மோசடிப் புகார்:

இது ஒருபுறம் இருக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நிலோபர் கபீல் பதவி வகித்தபோது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, நிறையப் பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கான பணத்தைத் தனது உதவியாளரான பிரகாசம் மூலம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தராமல் பணமோசடி செய்ததாகவும், அரசு வேலைக்காகப் பணத்தை இழந்தவர்கள் அமைச்சரின் உதவியாளர் பிரகாசத்திடம் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டுத் தொந்தரவு செய்து வருவதாகவும் சென்னை டிஜிபி அலுவலகத்தில் 10 பக்கங்கள் அடங்கிய புகார் மனு ஒன்றை கடந்த 3-ம் தேதி பிரகாசம் வழங்கினார்.

இந்தத் தகவல் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் கட்சியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in