

சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர், கடலூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் கல்வி சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு புதிய சான்றிதழ் வழங்குவதற்காக பள்ளி, கல்லூரிகளில் இன்று (திங்கள்கிழமை) முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
தமிழகத்தில் பெய்த கனமழை யால் வெள்ளத்தில் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் உடனடியாக புதிய சான்றிதழ்கள் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இன்று (திங்கள்கிழமை) முதல் 2 வார காலத்துக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்தவர்கள் இந்த முகாமில் விண்ணப்பித்து புதிய சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் பள்ளிகளின் விவரங்களை பள்ளிக் கல்வித் துறை ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.
மருத்துவ படிப்புகள் சம்பந்தப் பட்ட சான்றிதழ்கள் வழங்குவதற் காக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாமில் கல்விச் சான்றிதழ் நகல் பெற புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவங்களை சிறப்பு முகாம் நடக்கும் இடங்களில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். மேலும், சுகாதாரத் துறையின் இணையதளத்தில் (www.tnhealth.org) இருந்தும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி அறிவித்துள்ளார்.
இதேபோல, கனமழை காரணமாக கல்விச் சான்றிதழ்களை இழந்த சட்டம் படித்த, படிக்கும் மாணவ, மாணவிகள் புதிய சான்றிதழ்களை பெறும் பொருட்டு அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் உரிய முறையில் விண்ணப்பித்து புதிய மதிப்பெண் பட்டியல், கல்விச் சான்றிதழ்களை எவ்வித கட்டணமும் செலுத்தாமல் பெற்றுக் கொள்ளலாம் என்று சட்டக் கல்வி இயக்குநர் என்.எஸ்.சந்தோஷ் குமார் கூறியிருக்கிறார்.
பொறியியல் படிப்பு தொடர்பான சான்றிதழ்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் அண்ணா பல்கலைக்கழக கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தில் நடைபெறும் என்றும், இதில் விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு வாரத்தில் புதிய சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித் துள்ளது.