ராஜீவ்காந்தி வழக்கு குற்றவாளிகளுக்கு தனிச்சலுகை ஏற்க முடியாதது: கார்த்தி சிதம்பரம் எம்.பி கருத்து

ராஜீவ்காந்தி வழக்கு குற்றவாளிகளுக்கு தனிச்சலுகை ஏற்க முடியாதது: கார்த்தி சிதம்பரம் எம்.பி கருத்து
Updated on
1 min read

‘‘முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளுக்கு தனிச்சலுகை கொடுப்பதை ஏற்க முடியாது,’’ என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மூட நம்பிகை, வதந்திகளை நம்பி கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்க வேண்டாம். தடுப்பூசி மட்டுமே கரோனாவை தடுக்க ஒரே வழி .

சட்டரீதியாக ஆயுள் தண்டனை குற்றவாளிகள் 25 முதல் 30 ஆண்டுகள் சிறையில் இருந்தாலே அவரை விடுவிக்கலாம் என இருந்தால், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுவிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.

ஆனால் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளுக்கு மட்டும் சலுகை வழங்குவதை ஏற்க முடியாது. தமிழக சிறைச்சாலைகளில் 25 முதல் 30 ஆண்டுகள் வரை ஆயுள் தண்டனையை அனுபவித்த அனைவரையும் விடுதலை செய்யலாம் என்ற கொள்கை முடிவு எடுத்து, அதன் மூலம் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்தால் தடுக்கவோ, மறுக்கவோ மாட்டோம்.

சட்டரீதியாக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களை ஹீரோவாக்காதீர்கள். குண்டுவெடிப்பில் ராஜீவ்காந்தி மட்டும் இறந்து போகவில்லை. அவரோடு 16-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அவர்களைப் பற்றி யாரும் பேசுவது கிடையாது, என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in