Published : 21 May 2021 06:17 PM
Last Updated : 21 May 2021 06:17 PM

சிடி ஸ்கேன் எடுக்க அரசு காப்பீடு திட்ட நடைமுறைகள் எளிமையாக்கப்படுமா? கரோனா தொற்றை துல்லியமாக அறிய பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மதுரை

அரசு காப்பீடு திட்டத்தின் கீழ் சிடி ஸ்கேன் எடுத்துக் கொள்வதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு கரோனா நோயாளிகள் மத்தியில் எழுந்துள்ளது.

கரோனா தொற்றைக் கண்டறிய நோயாளிகளுக்கு அவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் அடிப்டையில் ஆர்டி பிஸிஆர் (RT PCR) கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்தப் பரிசோதனையில் நோய்த் தொற்று இல்லை என்று வந்தாலும் பலருக்கு சிடி ஸ்கேன் எடுத்துப்பார்க்கும் போது நுரையீரலில் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது.

அதனால், தற்போது நோய்த் தொற்று அறிகுறியுடன் இருப்பவர்கள், நோய் முற்றியவர்கள் பெரும்பாலும் சிடி ஸ்கேன் பரிசோதனையே செய்கின்றனர்.

அதனால், சிடி ஸ்கேன் மையங்கள் மட்டுமில்லாது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன் பரிசோதனை எடுக்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சிடி ஸ்கேன் அடிப்படையிலேயே மருத்துவர்கள் தற்போது கரோனாவின் பாதிப்பு நிலையை அறிந்து சிகிச்சை மேற்கொள்கின்றனர். அதனால், சிடி ஸ்கேன் தற்போது பொதுமக்களிடையே அதிக கவனம்பெற்றுள்ளது.

மருத்துவர்களும் பெரும்பாலும் கரோனா தொற்றை உறுதி செய்ய நோயாளிகளுக்கு சிடி ஸ்கேன் எடுப்பதையே அதிகம் பரிந்துரைக்கின்றனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பழைய மற்றும் புது கட்டிடத்தில் சேர்த்து மொத்தம் 5 சிடி ஸ்கேன் மற்றும் 2 எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனை இயந்திரங்கள் உள்ளன.

நாள் ஒன்றுக்கு சராசரியாக 120 லிருந்து 150 சிடி ஸ்கேன்கள் பார்க்கப்படுகின்றது. கரோனா தொற்று பாதிப்பு அறிகுறிகளோடு வருபவர்கள் மற்றும் இதர பொதுப்பிரிவுகளுக்கு சிடி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன் பயன்பாட்டை நிர்வாகத்திவரும் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் சிடி ஸ்கேன் எடுப்பதற்கு ரூ.500 மற்றம் மருந்து செலுத்தி எடுப்பதற்கு ரூ.800 வரை கட்டணமாக நிர்ணயித்துள்ளனர். அதே போல் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுப்பதற்கு ரூ.2,500 முதல் ரூ.4000 (மருந்து செலுத்தி எடுப்பதற்கு) கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு அரசு மருத்துவக் காப்பீட்டு அட்டையைப் பயன்படுத்தி இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என்று சலுகை இருந்தாலும் விண்ணப்பம் பெறப்பட்டு அனுமதி பெற (Approval) சென்னை தலைமை மருத்துவ காப்பீட்டு அலுவலகத்திலிருந்து ஓரிரு நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இதனால் கரோனா தொற்று உள்ளதா ? இல்லையா ? என்று தெரியாமலேயே தொற்றுள்ளவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வாய்ப்பு அமையாமல் போய்விடுகிறது. அவர்களும் மிகுந்த மனபதட்டம் அடைகின்றனர். உரிய நேரத்தில் உரிய சிகிச்சை கிடைக்காத நிலை ஏற்படுகின்றது. இதனால் மற்றவர்களுக்கு நோய்த் தொற்று பரவுவதற்கான அபாயமும் ஏற்படுகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆனந்த்ராஜ் கூறுகையில், ‘‘தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் சென்டர்களிலும் சிடி ஸ்கேன் எடுப்பவர்களின் தேவை அதிகரித்திருப்பதால் கட்டணங்களும் கனிசமாக கூட்டியுள்ளனர். சாதாரணமாக சிடி ஸ்கேன் எடுப்பதற்கு ரூ.3000 லிருந்து ரூ.5000 வரை வசூலிக்கிறார்கள். மருந்து செலுத்தி எடுப்பது மற்றும் இன்னும் சில பிரத்யேகமாக பார்க்கப்படும் ஸ்கேன்களுக்கு ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை கட்டணம் நிர்ணயித்து வசுலிக்கப்படுகிறது.

கரோனா பேரிடர் காலங்களில் வருமானம் இல்லாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி நிற்கும் மக்கள், ஸ்கேன் எடுப்பதற்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்வதால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.

அரசு மருத்துவக்காப்பீட்டு அட்டையை பயன்படுத்தி தனியார் ஸ்கேன் சென்டர்களில் சிடி ஸ்கேன் எடுப்பதற்கான நடைமுறைகள் உள்ளன. இதன் அடிப்படையில் எடுக்கச் சென்றாலும் அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

தனியார் ஆம்புலன்ஸ் வண்டிகளுக்கு கட்டணம் நிர்ணயித்தல், RT-PCR பரிசோதனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்ததுபோல் CT ஸ்கேன் எடுப்பதற்கான கட்டணத்தை முறைப்படுத்தவில்லை.

தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிடி ஸ்கேன் எடுப்பதற்கான அரசு மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் அனுமதி (Approval)) அதே நாளில் ஒரு சில மணி நேரங்களில் உடனடியாக கிடைத்திட நடைமுறைகளை மாற்றி அமைக்கவேண்டும்.

கரோனா பேரிடர் நாட்களில் தமிழகத்தில் சிடி ஸ்கேன் கட்டணத்தை அனைத்து தனியார் ஸ்கேன் சென்டர்களிலும் லாப நோக்கம் இல்லாமல் ஒரே கட்டணமாக குறைந்தபட்சம் கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x