

குமரி மாவட்டத்தில் ஊரடங்கிற்கு மத்தியில் வேளாண் உரங்கள் போதிய அளவில் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் நெல் நாற்றங்கால் நடவுப்பணி பாதிக்கும் சூழல் நிலவுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த மாதம் துவக்கத்தில் இருந்தே பெய்து வரும் தொடர் மழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. கோடை காலத்திலே போதிய நீர் கையிருப்பு உள்ளதால் பொதுப்பணித்துறை நீர்ஆதாரத்தினர், மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எதிர்பார்த்ததை விட மழை கைகொடுத்து வருவதால் ஜூன் மாதம் துவங்கும் கன்னிப்பூ நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் தற்போதே தொடங்கியுள்ளனர். குமரியில் 6500 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடந்து வரும் நிலையில், இரு வாரங்களுக்கு முன்னரே சுசீந்திரம், பறக்கை, பால்குளம், தேரூர் போன்ற பகுதிகளில் நாற்றங்கால் நடவு பணிகள் முடிந்துள்ளன.
இறச்சக்குளம், தெரிசனங்கோப்பு, திருப்பதிசாரம், தேரூர், இரணியல், வேம்பனூர், பெரியகுளம், கல்படி ஏலா போன்ற வயல்பரப்புகளில் நாற்றங்கால் பாவப்பட்டு உழவுப்பணிகள் நடந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் மேலும் 2 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் வயல்பரப்புகளில் நடவு பணிகளுக்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.
நெல் நாற்றங்கால் நடவு பணிக்கு தொழு உரத்துடன் ரசாயன உரம் கலந்து விவசாயிகள் நிலத்தை பண்படுத்தி வருகின்றனர். அடியுரமான டிஏபி(டை அமோனியம் பாஸ்பேட்), நுண்ணூட்ட உரமான சிங் சல்பேட் ஆகியவை நாற்றங்கால் நடவு பணிக்கு பயன்படுத்துகின்றனர். அம்பை 16, திருப்பதிசாரம் 5 ஆகிய நெல் ரகங்களுக்கான விதைநெல் தட்டுப்பாடின்றி கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்த வகிவசாயிகள் தற்போது கவலையில் உள்ளனர்.
ஊரடங்கு காலம் என்பதால் நெல் நாற்றங்கால் நடவு பணிக்கான அடியுரமும், நுண்ணூட்ட சத்து உரமும் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கூட்டுறவு சங்கங்கள், மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் உரக்கடைகளில் இந்த உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. கன்னிப்பூ சாகுபடி தீவிரமடைந்துள்ள நிலையில் காலை 10 மணி வரை மட்டுமே உரங்களை விநியோகம் செய்ய முடியும் என்பதால் நாற்று நடவிற்கு தேவையான ரசாயன உரங்களை எப்போதும் போல் கிடைப்பதில் சிரமம் நிலவி வருகிறது.
இதுகுறித்து விவசாயி செண்பகசேகர பிள்ளை கூறுகையில்; நாற்று நடவிரற்கான டிஏபி, சிங் சல்பேட் ஆகியவை சற்று விலை ஏறிய நிலையில் உரிய காலத்தில் விவசாயிகளுக்கு கிடைத்தால் தான் பயனுண்டு. தற்போது உரம் போதிய அளவில் வருவதாக வேளாண்துறையினர் தெரிவித்தாலும், ஊரடங்கால் காலையில் வயலில் வேளாண் பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளால் உரங்களை உரிய நேரத்தில் வாங்க முடியவில்லை. நட்டு 20 நாட்களக்கு பின்னர் யூரியா, பொட்டாஸ் போன்ற கையுரமும் அதிகம் தேவைப்படுகிறது. கன்னிப்பூ சாகுபடி பரபரப்பாக நடக்கும் நேரத்தில் குமரி மாவட்டத்தில் ரசாயன உரங்களை விநியோகம் செய்யும் நேரத்தை அதிகரிப்பதுடன், விவசாயிகள் உரத்தை வாங்கி செல்லும்போது காவல்துறையினர், சுகாதாரத்துறையினர் கெடுபிடியுடன் நடந்து கொள்வதை தளர்த்தி கொள்ளவேண்டும். காலம் தாழ்த்தி செல்லும் விவசாயிகளிடம் உரமூட்டைகளை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்றார்.