

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு நடத்தினார்.
கரோனா தடுப்புப் பணியின் ஒரு பகுதியாக, நேற்று (மே 20) சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து இன்று (மே 21) ஆக்சிஜன் படுக்கை எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், மதுரை அருகிலுள்ள தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு சிகிச்சை மையத்தைத் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, திருச்சி சென்ற முதல்வர் ஸ்டாலின், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைகள் தொடர்பாக ஆய்வு நடத்தினார். தொடர்ந்து, மருத்துவமனையின் சிறப்பு சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தின் 6-வது தளத்தில், கரோனா நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியற்ற படுக்கைகளைப் பார்வையிட்ட அவர், அதே தளத்தில் கரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் செறிவூட்டிகளுடன் அமைக்கப்பட்டுள்ள அதிதீவிர கரோனா சிகிச்சைப் பிரிவு மையத்தைத் திறந்து வைத்தார்.
கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் தொடர்பான விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்த முதல்வர், மருத்துவர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார்.
தொடர்ந்து, திருச்சி கலையரங்க மண்டபத்தில் 100 படுக்கைகளுடன் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தைத் திறந்துவைத்து, மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு கரோனா தடுப்பூசி இடும் பணியைப் பார்வையிட்டு, தடுப்பூசி இட்டுக் கொண்டதற்கான சான்றிதழ்களை அவர்களுக்கு வழங்கினார்.
முதல்வருடன் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மாநிலப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து, திருச்சி துவாக்குடி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 360 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா பாதுகாப்பு சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.