

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் சூறைக் காற்றுடன் கூடிய மிக கனமழையும், 7 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் இன்று தெரிவித்துள்ளதாவது:
’’வெப்பச் சலனம் மற்றும் தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக இன்று கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும். கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை நிலவரம்
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தென் தமிழகக் கடற்பகுதியில் மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45ல் இருந்து 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்’’.
இவ்வாறு நா.புவியரசன் தெரிவித்துள்ளார்.