

ரெம்டெசிவிர் மருந்துகள் வாங்க ஆன்லைன் மூலம் பதிவு செய்த தனியார் மருத்துவமனைகளுக்கு, சென்னையில் அம்மருந்துகள் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக உள்ளது. நேற்று (மே 20) மட்டும் தமிழகம் முழுவதும் 35,579 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 6,073 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று தமிழகம் முழுவதும் 397 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 19,131 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று தாக்கப்பட்டு, தீவிர சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து, தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
தனியார் மருத்துவமனைகளுக்கு, சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்களில் நேரடியாக நோயாளிகளின் குடும்பத்தினர் மூலமாகவும் இந்த மருந்து வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் இடங்களில், அதிகக் கூட்டம் கூடுவதால், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டு, நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. மேலும், இங்கு மருந்துகளைப் பெறுவோர் சிலர், அவற்றைத் தவறான முறையில் அதிக விலையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது குறித்த புகார்களும் எழுந்தன.
இதனிடையே, ரெம்டெசிவிர் மருந்து ஆக்சிஜன் சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே சிறிது பலன் தருவதாகவும், மற்ற நோயாளிகளுக்கு இதனால் பெரிய அளவில் பலன் இல்லை என்றும் உலக சுகாதார நிறுவனமும், மருத்துவ நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தமிழகத்திலுள்ள அனைத்துத் தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, மருந்து தேவை குறித்த தமது கோரிக்கைகளை இணையதளத்தில் பதிவிடும் வசதி சில தினங்களுக்கு முன் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது.
அதன்படி, ரெம்டெசிவிர் மருந்துக்காக முன்பதிவு செய்த தனியார் மருத்துவமனைகளுக்கு இன்று (மே 21) சென்னை, அண்ணாநகரில் உள்ள மருந்துக் கிடங்கு மூலம், சென்னை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்களிலிருந்து வரக்கூடிய தனியார் மருத்துவமனையைச் சேர்ந்தவர்களுக்கு, உரிய ஆவணங்களின் அடிப்படையில் ரெம்டெசிவிர் மருந்துகள் விநியோகம் செய்யப்படுகின்றன.