தமிழகம்
கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து: தெலங்கானாவிலிருந்து புதுச்சேரிக்கு வரவழைத்த ஆளுநர் தமிழிசை
கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் மருந்துகளைத் தெலங்கானாவிலிருந்து புதுச்சேரிக்கு வரவழைத்து, துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று ஜிப்மருக்கு அளித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க மருந்துகள் தேவைப்பட்டன. இதை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதையடுத்து ஆளுநர் தமிழிசை தெலங்கானா முதல்வரிடம் மருந்துகளைக் கோரினார். அதையடுத்து உடனடியாக கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 10 ஆம்ஃபோடெரிசின்-பி மருந்துகள் தெலங்கானாவிலிருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இன்று அனுப்பப்பட்டன.
உடன் மருத்துவ உதவிகள் தந்ததற்காக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தெலங்கானா ராஜ்பவன் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக ஆளுநர் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.
