

கரோனா காரணமாக பிரெஞ்சு தூதரக உறுப்பினர் தேர்தலை தள்ளி வைக்க என வேண்டும் என புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஆயிரக்கணக்கில் வசித்து வருகின்றனர். பிரெஞ்சு செனட் உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 30-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியிடுபவர்கள் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் வீடுகளுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். புதுவையில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் இத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம், பிரெஞ்சு தூதரகம், ஆளுநர் தமிழிசை உட்பட பலருக்கும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பிரெஞ்சு குடியுரிமை பெற்ற விஜயகுமார் ஆளுநர் தமிழிசைக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: "பிரெஞ்சு தூதரக உறுப்பினர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குடியுரிமை பெற்றவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். புதுவையில் கரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. பிரெஞ்சு குடியுரிமை பெற்ற பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிலர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். உச்சநீதிமன்றம் நாட்டில் எந்த தேர்தலையும் நடத்தக்கூடாது என உத்தரவும் பிறப்பித்துள்ளது. இச்சூழ்நிலையில் பிரெஞ்சு தூதரக தேர்தல் கரோனா தொற்றை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. பிரெஞ்சு தூதரகம் சார்பில் தடுப்பூசி போடும் பணி வரும் 26ம் தேதிதான் தொடங்க உள்ளது. இந்நிலையில் தேர்தலை நடத்துவது பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மூத்த குடிமக்களை அபாயத்தில் தள்ள வழி வகுக்கும். எனவே இத்தேர்தலை உடனடியாக ஒத்தி வைக்க உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.