Published : 21 May 2021 03:38 PM
Last Updated : 21 May 2021 03:38 PM

ராஜீவ் காந்தி நினைவு நாள்: கரூர் அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய ஜோதிமணி எம்.பி.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கரூர் எம்.பி. செ.ஜோதிமணி 10 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குகிறார். அருகில் கல்லூரி முதல்வர் பி.அசோகன், கண்காணிப்பாளர் தெய்வநாதன் உள்ளிட்டோர்.

கரூர்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் செறிவூட்டிகளை கரூர் எம்.பி. செ.ஜோதிமணி வழங்கினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30வது நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பாக கரூர் எம்.பி. செ.ஜோதிமணி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் செறிவூட்டிகளை (கான்சன்ட்ரேட்டர்) மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பி.அசோகனிடம் இன்று (மே 21ம் தேதி) வழங்கினார். அப்போது கண்காணிப்பாளர் தெய்வநாதன், மருத்துமனை ஊழியர் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதைத் தொடர்ந்து ஜோதிமணி செய்தியாளர்களிடம் கூறும்போது, ’’ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் கரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை காங்கிரஸ் கட்சி வழங்கி வருகிறது.

அந்த வகையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு ரூ.6 லட்சம் மதிப்புள்ள 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு 5, வேடசந்தூர், விராலிமலை மருத்துவமனைகளுக்கு 5 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்படுகின்றன’’ என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் கரூர் மத்திய நகரத் தலைவர் பெரியசாமி, மாவட்டப் பொருளாளர் மெய்ஞானமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உருவப் படத்திற்கு மாலை அணிவிப்பு

முன்னதாக, கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி உருவப்படத்திற்கு மாவட்டத் தலைவர் ஆர்.சின்னசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாவட்ட துணைத் தலைவர்கள் எஸ்.நாகேஸ்வரன், எம்.ஜாஹிர்உசேன், மாவட்டப் பொருளாளர் மெய்ஞானமூர்த்தி, மாவட்ட ஓபிசி பிரிவு தலைவர் பழனிகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நோயாளிகளுக்கு உணவு வழங்கல்

மேலும் கரூர் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள், ஊழியர்கள் சுமார் 250 பேருக்கு காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் உணவுப் பொட்டலங்களை வழங்கினார். பொதுக்குழு உறுப்பினர் சுப்பன், வட்டாரத்தலைவர் ஜிபிஎம் மனோகர், துணை தலைவர் சின்னையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x