

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலைக்கு குடியரசுத் தலைவர் உத்தரவிட வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (மே 21) வெளியிட்ட அறிக்கை:
"முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என, ஒட்டுமொத்தத் தமிழகமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக, சிறை தண்டனை அனுபவித்து வரும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என, தமிழ்நாடு அமைச்சரவை 2018 செப்டம்பர் மாதம் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
இதன் மீது முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குதான் இருக்கிறது எனக் கூறிய ஆளுநர், அமைச்சரவைத் தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மிகுந்த வேதனையில் சிறையில் வாடும் எழுவர் விடுதலை குறித்து, 30 மாதங்களாக முடிவெடுக்காமல் இருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த இயலாது.
நாட்டின் உச்ச நீதிமன்றம் கரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை அதி வேகமாகப் பரவி வருவதைக் கருத்தில்கொண்டு, சிறைவாசிகள் எண்ணிக்கை குறைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 19.05.2021ஆம் தேதியில் எழுதியுள்ள கடிதத்தின் வேண்டுகோளை ஏற்று, எழுவர் விடுதலைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு குடியரசுத் தலைவரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது".
இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.