தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை; பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்.
பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்.
Updated on
1 min read

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் கொடும் காயமடைந்தவர்கள் 17 பேருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 21) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"2018-ம் ஆண்டு நடந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் கொடும் காயமடைந்தவர்கள் 17 பேருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் கிராம உதவியாளர்களாகவும் மற்றும் சமையலராகவும் பணி நியமனம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில், கிராம உதவியாளராகப் பணி நியமனம் செய்யப்பட்டவர்களில் 16 நபர்கள் அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் இளநிலை உதவியாளர்களாகவும், ஒரு நபர் ஈப்பு ஓட்டுநராகவும் பணி நியமனம் வழங்கிட தமிழக அரசுக்கு நீண்ட நாட்களாகக் கோரிக்கைகளை அளித்திருந்தனர்.

தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்தக் கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலித்து, மேற்படி நபர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் கீழ் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பேரூராட்சித் துறைகளில் 16 நபர்களுக்கு இளநிலை உதவியாளர்களாகவும், ஒரு நபருக்கு ஈப்பு ஓட்டுநராகவும் பணி நியமன ஆணைகளை இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in