Last Updated : 21 May, 2021 02:08 PM

 

Published : 21 May 2021 02:08 PM
Last Updated : 21 May 2021 02:08 PM

புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு அரசு ஊழியர் உட்பட 20 பேர் வரை பாதிப்பு: ஆளுநர் தமிழிசை தகவல்

புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு அரசு ஊழியர் உட்பட 20 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகத் துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா 2- வது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுவையில் நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாகத் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சராசரியாக நாள்தோறும் 25க்கும் மேற்பட்டோர் இறந்து வருகின்றனர். தொற்றைத் தடுக்க அரசின் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை அரசே கையகப்படுத்தி கரோனா நோயாளிகளை சிகிச்சைக்காக அனுமதித்து வருகிறது.

இந்நிலையில் கரோனா தொற்றாளிகளைக் கருப்பு பூஞ்சை என்ற நோய் தாக்குவதாகத் தகவல் வெளியானது. ராஜஸ்தான், மகாராஷ்டிர மாநிலங்களில் தொற்று பாதித்த சிலருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் அதிகம் இருப்பதாகச் செய்திகளும் வெளியாகின. அதீத சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஸ்டீராய்டு மருந்து எடுப்பவர்கள், பல நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்கள், சில தெரபிகள் எடுத்துக்கொள்வோருக்குக் கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில் புதுவையிலும் கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் தொடங்கியுள்ளது.

இதுபற்றி துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் கேட்டதற்கு, "கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு ஆறுதலாக அரசாங்கம் இருக்க வேண்டும் என்று முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். தற்போது கருப்பு பூஞ்சை நோய் வேகமாகப் பரவுகிறது. இது குறிப்பிடத்தக்க நோயாக அறிவிக்க கோப்பு தயாராகிறது. எங்கு கண்டறியப்பட்டாலும் அரசிடம் தெரிவிக்கவேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தற்போது வரை 20 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு ஊழியர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார். கரோனா தொற்று ஏற்பட்டால் சுயமருத்துவம் செய்தாதீர். மருத்துவரை அணுகுங்கள்" என்று குறிப்பிட்டார்.

நோயின் தாக்கத்தால் பார்வை இழந்து கிச்சைக்கு வந்த 5 நோயாளிகள்

நாள்தோறும் புதுவை, தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் இருந்து கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் நோயாளிகள் புதுவை அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருவதாகத் தகவல்கள் கிடைத்தன.

இதுகுறித்து கண் மருத்துவமனை டாக்டர் வெங்கடேஷ் கூறுகையில், "கரோனா வந்தவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள் நாள்தோறும் ஒருவர் அல்லது 2 பேர் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புடன் சிகிச்சைக்காக வருகின்றனர். இதுவரை இங்கு 14 நோயாளிகள் வந்துள்ளனர். அதில் மூவர் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள்.

நோயின் தாக்கம் அதிகரித்து சிகிச்சைக்கு வரும்போதே 5 பேருக்குப் பார்வையில்லை. கருப்பு பூஞ்சை நோய் மூக்கின் வழியே, கண்ணில் பரவி ரத்தகுழாய்களைச் சிதைக்கிறது. உடலில் எதிர்ப்பு சக்தி குறைவானோர், நீரிழிவு அதிகமாக இருப்பவர்களை இந்நோய் தாக்குகிறது. ஸ்டீராய்டு அதிகமாக எடுப்பவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைகிறது. அவர்களின் உடலில் பூஞ்சை வளர்ந்து கண் பார்வையை பாதிக்கிறது.

தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் பலர் நோய் பாதிப்புடன் சிகிச்சைக்கு வருகின்றனர். இதன் அறிகுறிகளைத் தெரிந்துகொள்வது கஷ்டம். கண்ணைச் சுற்றி வீக்கம், வாய், மூக்கில் ரத்தம் வந்தால் உடனடியாகப் பரிசோதனை செய்ய வேண்டும். காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் சென்று எண்டாஸ்கோப் பார்த்தால் நோயின் தாக்கம் தெரியும். எல்லா கரோனா நோயாளிகளுக்கும் கருப்பு பூஞ்சை தொற்று வராது. நீரிழிவு நோய் அதிகமாக உள்ளவர்களைப் பெருமளவில் தாக்கும். அவர்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x