

கரோனா பணிகளில் வடமாநில ஐஏஎஸ் அதிகாரிகள் சரியாக செயலாற்றவில்லை, சரியான உணவில்லாமல் கரோனா பாதித்தோர் உயிரிழக்கின்றனர் என்று அதிமுக சாடியுள்ளது.
புதுச்சேரியில் தேர்தலில் வென்ற என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக தற்போதைய கரோனா பணிகளை கடுமையாக விமர்சித்துள்ளது. புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்ட அறிக்கை:
"புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கரோனா தொற்றுமற்றும் கரோனா மரணங்கள் தடுப்பது குறித்து அரசிடம் எந்தவித உருப்படியான திட்டமும் இல்லை. நோய் தொற்றைக் குறைக்க அறிவித்த ஊரடங்கை சரியாக அமல் படுத்துவதில் அரசு முழுமையாக தோல்வியடைந்து விட்டது.
குறிப்பாக மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு தினசரி மாற்றுதலுக்கு உட்பட்டதாக உள்ளது. கும்பல் அதிகம் கூடும் மக்கள் காய்கறி சந்தைகள், மீன் அங்காடிகள் இடம் குறித்து அரசிடம் தெளிவான உறுதியான நடவடிக்கை ஏதும் இல்லை.
கடந்த ஆண்டு ஏற்பட்ட கரோனா நோய்தொற்றின் போது புதிய பேருந்து நிலையத்தில் காய்கறி சந்தை மாற்றப்பட்டது. தற்போது காய்கறி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்பதற்காக நேரு வீதியில் குறுகான சாலையில், காய்கறி சந்தை மாற்றுவது சரியல்ல.
குறுகலான மார்கெட்டில்தான் விற்பனை செய்வோம் என அடம்பிடித்தால் மக்கள் நலன் கருதி மார்கெட்டை இழுத்து மூடுவதை விட்டுவிட்டு வியாபாரிகளுக்காக மாற்றி மாற்றி முடிவெடுப்பது ஊரடங்கையே கேலிக்கூத்தாக மாற்றியிருக்கிறது. புதுச்சேரியை பொறுத்தவரை 20க்கும் மேற்பட்ட ஐஏஎஸ். ஆதிகாரிகள் உள்ளனர். இதில் 8-க்கும் மேற்பட்ட தமிழ் தெரிந்த அதிகாரிகள் உள்ளனர். கடந்த ஆட்சியில் உயர்மட்ட அதிகாரிகள் இரு பிரிவுகளாக செயல்பட்டனர். தற்போதும் அதேநிலைதான் நீடித்து வருகிறது.
வடமாநில ஐஏஎஸ் அதிகாரிகள் மீது புகார்
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சுகாதாரம், நிதித்துறை, உள்ளாட்சித்துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அதிமுக்கியமான பதவிகளில் வடமாநில அதிகாரிகள் நீக்கமற நிறைந்துள்ளனர். புதுச்சேரி மக்கள் கரோனா பிடியிலிருந்து மறுபடியும் சிக்கி தவிக்கும் நிலையில் வடநாட்டை சேர்ந்த எந்த அதிகாரியும் கவலைகொள்ளாமல் இருப்பது சரியானதாக இல்லை.
போர்க்கால அடிப்படையில் அரசின் உயரதிகாரிகள் செயல்படவேண்டிய இத்தருணத்தில் ஏசி அறையை விட்டு வெளியில் வராமல் தினசரி மாறுபட்ட உத்தரவுகளை பிறப்பித்து மக்களின் உயிரோடு விளையாடி வருகிறார்கள்.
சேவைமனப்பான்மையுடன் மாநில மக்களின் நலனுக்காக செயல்படாத மனநிலையில் உள்ள பல்வேறு துறைகளில் செயலாளர்களை உடனே முதல்வர் மாற்றும் செய்ய வேண்டும்.
கரோனா பாதிப்பில் வரும் நோயாளிகளை வீட்டிலேயே தனிமை படுத்திக் கொள்ளுங்கள் என திருப்பி அனுப்பப்படுபவர்களுக்கு அரசு அவர்களுக்கு நிவாரண உதவி ஏதும் வழங்காதது ஏற்புடையதல்ல. கரோனா நோயால் பாதிக்கப்பட்ட நடுத்தர குடும்பத்தினருக்கு சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் குடும்பத்திற்கு வங்கி கணக்கு மூலம் ரூ.7500 செலுத்த வேண்டும்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் சத்தான உணவு இல்லாமல் சீக்கிரத்தில் மரணத்தை தழுவுகிறார்கள் என்பதை அரசு உணரவேண்டும். முதல்வர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.