தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; 13 பேரைச் சுட்டுக்கொன்ற காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்க: வைகோ

வைகோ: கோப்புப்படம்
வைகோ: கோப்புப்படம்
Updated on
1 min read

தூத்துக்குடியில் 13 பேரைச் சுட்டுக்கொன்ற காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (மே 21) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டை உலுக்கிய அந்த நிகழ்வு நடந்து, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஆம்; நாளை மே 22. 2018 ஆம் ஆண்டு, இதே நாளில்தான், தூத்துக்குடியில் 13 அப்பாவித் தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அவர்கள் செய்த தவறு என்ன? தூத்துக்குடி சுற்றுச்சூழலைக் கெடுக்கின்ற ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, அறவழியில் அணிவகுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்றதுதான். வழியில் அவர்களை மறித்த காவல்துறையினர், பொதுமக்களை நோக்கிச் சுட்டனர். ஜான்சி, ஸ்நோலின் என்ற இரு பெண்கள் உட்பட, 13 பேர் உயிரிழந்தனர்.

அவர்களைச் சுட்டுக்கொன்ற அந்தக் குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற அப்பாவி வணிகர்களை அடித்துக் கொன்ற காவல்துறையினர் மீது, கொலைக் குற்ற வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என நான் அறிக்கை விடுத்தேன். அதன்படியே, கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். வழக்கு நடைபெறுகின்றது.

அதேபோல், ஸ்டெர்லைட் ஆலைக்காக, 13 பேரைச் சுட்டுக்கொன்ற காவலர்கள் மீதும், கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அவர்களைக் கைது செய்ய வேண்டும். அப்பொழுதுதான், இறந்தவர்களுக்கு நீதி கிடைக்கும்.

தூத்துக்குடி மண்ணையும் மக்களையும் காக்க, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி, தங்கள் இன்னுயிர்களை ஈந்த போராளிகளுக்கு, வீர வணக்கம் செலுத்துவோம்!".

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in