கரோனா பரிசோதனைக்கு கட்டணம் குறைப்பு: தனியார் ஆய்வகங்களில் ரூ.900 ஆக நிர்ணயம்

கரோனா பரிசோதனைக்கு கட்டணம் குறைப்பு: தனியார் ஆய்வகங்களில் ரூ.900 ஆக நிர்ணயம்
Updated on
1 min read

தமிழகத்தில் கரோனா பரிசோதனைக்கான கட்டணம், தனியார் ஆய்வுக் கூடங்களில் ரூ.900 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணை:

கடந்த மே 14-ம் தேதி, கரோனா தொற்று சிகிச்சை கட்டணம் தொடர்பான உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் பரிந்துரைத்துள்ளார். இதை பரிசீலித்த தமிழக அரசு, கட்டணத்தை குறைவாக நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கரோனா தொற்றை உறுதிப்படுத்தும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை அரசு மற்றும் அரசால் பரிந்துரைக்கப்படும் மாதிரிகள் தனியார் ஆய்வுக் கூடங்களில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.800-ல் இருந்து ரூ.550 ஆகவும், குழு மாதிரிகளுக்கு ரூ.600-ல் இருந்து ரூ.400 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இல்லாதவர்கள், தனியார் ஆய்வுக் கூடங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.1,200-ல் இருந்து ரூ.900 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், வீட்டுக்கு சென்று பரிசோதனை செய்ய கூடுதலாக ரூ.300 நிர்ணயிக்கப்படுகிறது.

முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத தனியார் மருத்துவமனைகளில் பரிசோதிக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளுக்கான தொகையை யுனைட்டட் இந்தியா காப்பீடு நிறுவனம் மறு பரிசீலனை செய்த பிறகு திருப்பி வழங்கப்படும்.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in