

தொலைத்தொடர்பு, போக்குவரத்து வசதிகளற்ற நீலகிரி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம்தெங்குமரஹாடா. வேளாண்மையை பிரதானமாகக் கொண்டுள்ள இந்தக் கிராமத்தில் பழங்குடிகள் மற்றும் இதர பிரிவினர் வசிக்கின்றனர். தெங்குமரஹாடா, புதுக்காடு, சித்திரம்பட்டி, அல்லிமாயாறு,கல்லம்பாளையம் ஆகிய கிராமங்களில் 1470 பேர் வசிக்கின்றனர்.
கரோனா முதல் அலையில் தப்பி பிழைத்த இந்த கிராமத்தில், 2-வது அலையில் 25 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தெங்குமரஹாடா ஆரம்ப சுகாதார நிலையம்தான், அங்குள்ள மக்களுக்கு மருத்துவதேவையைப் பூர்த்தி செய்கிறது.இந்த ஆரம்பசுகாதார நிலையத்தின்மருத்துவராக அருண் பிரசாத் பணிபுரிந்து வருகிறார்.
இளம் மருத்துவரான இவர், தினமும் வீடு, வீடாக சென்று, மக்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிப்பதுடன், கரோனா வழிமுறைகளை கூறி வருகிறார்.
இதுதொடர்பாக மருத்துவர் அருண் பிரசாத்திடம் பேசும்போது,"எனக்கு சொந்த ஊர் கோவை.நீலகிரி மாவட்டம் சோலூர்மட்டத்தில் பணியமர்த்தப்பட்டு, ஓராண்டு பணிபுரிந்தேன்.
தெங்குமரஹாடாவில் பணி புரிந்து வந்த மருத்துவர் ஜெய மோகன் இறந்ததும், இந்தக் கிராமத்துக்கு வந்தேன். கரோனா முதல் அலையில் 9 மாதங்கள் கிராமத்திலேயே தங்கியிருந்தேன். தற்போது இரண்டு மாதங்கள் வெளியூர் செல்லாமல் இங்கேயே தங்கியுள்ளேன். தெங்குமரஹாடா வில் 25 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இவர்கள், கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் நோய் தீவிரமாக உள்ள 5 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொற்றாளர்களின் தொடர்பில் உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். அனைத்து மக்களுக்கும், வாகனங்களில் வெளியே சென்றுதிரும்புவோருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
தொற்றாளர்களை தனிமைப்படுத்த, அங்குள்ள அரசு பள்ளி கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு வருகிறது. அவசர தேவைக்கு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பில் உள்ளன" என்றார்.
மருத்துவர் அருண் பிரசாத்தின் மருத்துவ சேவை குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, "கடந்தசில நாட்களுக்கு முன்னதாக தெங்குமரஹாடாவில் நடைபெற்ற சிறிய விழாவின் மூலமாக 25 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நோய் தொற்று ஏற்படும்போது, ஒற்றை ஆளாக நின்று வீடு, வீடாக சென்று பேசி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். 108 வாகனம் ஆற்றை கடந்து தெங்குமரஹாடா ஊருக்குள் வர முடியாதசூழலில், நோயாளிகளை வீட்டிலிருந்து அரசு வாகனத்தில் ஏற்றிஆற்றுப்படுகைக்கு அழைத்து வந்து, பின்னர் அவர்களின் கைகளை பிடித்து 108 வாகனத்தில்ஏற்றி, கோத்தகிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற வைத்துவிட்டார்" என்றனர்.