சென்னையில் 304 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் - புதிதாக 2 கரோனா சிகிச்சை மையங்கள்: அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்

சென்னை எழும்பூரில் உள்ள டான் போஸ்கோ பள்ளியில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்து பார்வையிட்டார். தயாநிதி மாறன் எம்.பி., எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள்  உடனிருந்தனர். படம்: ம.பிரபு
சென்னை எழும்பூரில் உள்ள டான் போஸ்கோ பள்ளியில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்து பார்வையிட்டார். தயாநிதி மாறன் எம்.பி., எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். படம்: ம.பிரபு
Updated on
1 min read

சென்னையில் 304 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய இரு கரோனா சிகிச்சை மையங்களை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று திறந்துவைத்தார்.

சென்னை மாநகராட்சி சார்பில், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 200 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் மற்றும் டான் போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் ஆக்சிஜன் வசதியுடன் 104 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று திறந்துவைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதால், ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில், மாநகராட்சி சார்பில் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் கரோனா கிசிச்சை மையங்களில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மாநகராட்சி சார்பில் 745 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், தொண்டு நிறுவனங்கள் மூலம் 845 ஆக்சிஜன் செறியூட்டிகள் பெறப்பட்டுள்ளன. மொத்தம் 1,590 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மருத்துவமனைகள் மற்றும் கரோனா சிகிச்சை மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சென்னையில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கரோனா மையத்தில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 50 படுக்கைகள் குழந்தைகளுக்கும், 150 படுக்கைகள் பெரியவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி எம்.ஏ.சித்திக், மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், எழும்பூர் தொகுதி எம்எல்ஏ இ.பரந்தாமன், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் இ.தேரணிராஜன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in