அண்ணா பல்கலைக்கழக முறைகேடு புகார்கள்; குற்றச்சாட்டுகளை மறுத்து ஆணையத்தில் சுரப்பா பதில் மனு: அரசிடம் விசாரணை அறிக்கை விரைவில் தாக்கல்

அண்ணா பல்கலைக்கழக முறைகேடு புகார்கள்; குற்றச்சாட்டுகளை மறுத்து ஆணையத்தில் சுரப்பா பதில் மனு: அரசிடம் விசாரணை அறிக்கை விரைவில் தாக்கல்
Updated on
1 min read

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுரப்பா, தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முழுமையாக மறுப்பு தெரிவித்து விசாரணை ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக எம்.கே.சுரப்பா கடந்த 2018 முதல் 2021 ஏப்ரல் 12-ம் தேதி வரை பொறுப்பு வகித்தார். இவரது பணிக் காலத்தில் ஆசிரியர்கள் பணி நியமனம் உள்ளிட்டவற்றில் ரூ.280 கோடிக்கு முறைகேடுநடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து ஓய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் 7 பேர் கொண்ட ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. பல்கலை. உயரதிகாரிகள், புகார் அளித்தவர்கள், சாட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து, புகார்கள் தொடர்பாக விளக்கம் கேட்டு சுரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கான பதில் மனுவை ஆணையத்திடம் சுரப்பா சமர்ப்பித்துள்ளார். இதையடுத்து, அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கையை இறுதி செய்யும் பணிகளை ஆணையம் தற்போது முடுக்கிவிட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணைக் குழு அதிகாரிகள் சிலர் கூறியதாவது;

விசாரணையில், சுரப்பா மீதான குற்றச்சாட்டுகளுக்கு சில முகாந்திரங்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் விளக்கம் கேட்டு சுரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கான பதில் மனுவை சுரப்பா தனது வழக்கறிஞர் மூலம் சமீபத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘என் மீதான குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை. அனைத்து முறைகேடு புகார்களையும் முழுமையாக மறுக்கிறேன். பணிக் காலத்தில் நேர்மையுடன் செயல்பட்டதால், பழிவாங்கும் நோக்கத்தில் இந்த குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் நேரடி விசாரணைக்கு அழைக்கக் கூடாது’ என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் பதில் மனு தாக்கல் செய்துவிட்டதால், அறிக்கையை இறுதிசெய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இப்பணிகளை துரிதமாக முடித்து ஓரிரு நாளில் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விசாரணை ஆணையத்தின் காலம் இம்மாத இறுதியில் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in