18 முதல் 45 வயதுடையோருக்கு கோரிமேட்டில் மட்டுமே தடுப்பூசி மையங்களா? - கிராமப் பகுதிகளில் இருந்து வருவோர் தவிப்பு

18 முதல் 45 வயதுடையோருக்கு கோரிமேட்டில் மட்டுமே தடுப்பூசி மையங்களா? - கிராமப் பகுதிகளில் இருந்து வருவோர் தவிப்பு
Updated on
1 min read

புதுச்சேரியில் 18 வயதில் இருந்து 45 வயதுடையோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி, கோரிமேடு பல் மருத்துவக் கல்லூரி, கோரிமேடு இஎஸ்ஐ மருத்துவமனை, கோரிமேடு அரசு நெஞ்சக மருத்துவமனைகளில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த மையங்கள் அனைத்தும் அருகருகே உள்ளன.

“பகல் 12 மணிக்கு மேல் ஊரடங்கு உள்ளது. கிராமப் பகுதிகளில் இருந்து புதுச்சேரிக்கு வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டு ஊர் திரும்புவதில் பிரச்சினை உள்ளது. போதிய போக்குவரத்தும் இல்லை. தடுப்பூசி போட வீட்டில் உள்ளோருடன் வர வேண்டியது தொடங்கி பல பிரச்சினைகள் பெண்களுக்கு உள்ளன. 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு அந்தந்தப் பகுதி ஆரம்ப சுகாதார நிலையம், சிறப்பு மையங்களில் தடுப்பூசி போடப்படுகின்றன. அவர்கள் இலகுவாக சென்று போட்டு வருகின்றனர். அதே போல் அந்தந்த பகுதியிலேயே நாங்களும் தடுப்பூசி போட அரசு ஏற்பாடு செய்தால் அதிமானோர் தடுப்பூசி போட முடியும்" என்று இளைஞர்கள் மற்றும் 45 வயதுக்குட்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.

வெளி மாநில மாணவர்கள் தவிப்பு

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் பரிட்சய் யாதவ் கூறுகையில், "புதுச்சேரி அரசின் தடுப்பூசி வழிகாட்டுதலில், புதுச்சேரி மாநிலம் அல்லாதோருக்கு தடுப்பூசி செலுத்தப்படாது என கூறியுள்ளனர். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் தங்கி பயிலும் மாணவர்கள் தொடங்கி பல கல்லூரிகளில் பயிலும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான இளையோர் இதனால் பாதிக்கப்படுவர். வெளிமாநிலத்தில் இருந்து வந்த பலரும் தற்போதும் கல்விச்சார்ந்த காரணங்களால் புதுச்சேரியில்தான் உள் ளோம்.

எங்களது சொந்த மாநிலங் களுக்குச் சென்று தடுப்பூசி போடுவது இயலாத காரியம். ஆகையால், புதுச்சேரியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முன் வர வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோருக்கு கோரிக்கை வைத்துள்ளோம். பல்கலைக்கழக துணைவேந்தருக்கும் இக்கருத்தை அனுப்பியுள்ளோம்" என்று தெரிவித்தார்.

45 வயதுக்கு மேற்பட்டோருக்கு அந்தந்தப் பகுதி ஆரம்ப சுகாதார நிலையம், சிறப்பு மையங்களில் தடுப்பூசி போடப்படுகின்றன. அவர்கள் இலகுவாக சென்று போட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in