

தென்மாவட்ட மக்களின் உயிர் காக்கும் மையமாக திகழும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அவசர, அவசிய தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை உடனடியாக நியமிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முக்கிய கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அடுத்தபடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தமிழகத்தின் மிகப்பெரிய மருத்து வமனையாகத் திகழ்கிறது. இங்கு 3,500 படுக்கைகள் உள்ளன. நாளொன்றுக்கு 10 ஆயிரம் வெளி நோயாளிகள், 3,500 உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவ மனையின் கீழ் தோப்பூர் (காசநோய்), பாலரெங்காபுரம் அரசு மருத்துவமனைகள் செயல்ப டுகின்றன.
அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தென் மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மருத்து வமனைகளில் இருந்தும் உயிர் காக்கும் உயர் சிகிச்சை களுக்கு நோயாளிகள் பரிந்து ரைக்கப்படுகின்றனர். இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் பரிந்துரைக்கப்பட்ட 600-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.
ஆனால், இம்மருத்து வமனையில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்து வர்கள், செவிலியர்கள், மருந்தா ளுநர்கள், இதர மருத்துவப் பணியாளர்கள் இல்லை. மருத்துவமனையில் உள்ள 70 சதவீத படுக்கைகளில் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதால் இதுவரை இரண்டு ஷ்ப்ட் பணிபுரிந்தவர்கள் தற்போது 4 ஷிப்ட் பணிபுரிய வேண்டியுள்ளது. சுழற்சி முறையில் ஓய்வும் வழங்கப்பட வேண்டிய நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், பணியாளர்களின் தேவை மிக அதிகமாக இருக்கிறது.
தோப்பூரில் தற்போது 500 படுக்கைகள் உருவா க்கப்பட்டுள்ளன. அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு எப்படி சிகிச்சை வழங்குவது என தெரியாமல் மருத்துவர்கள் கலக்க த்தில் உள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது:
2005-ம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கிய மருத்துவக் கல்லூ ரிகளில் செவிலியர்கள் பற்றா க்குறை இல்லை. ஆனால் சென்னை, மதுரை போன்ற பெரிய மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்ற மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை மிக அதிகமாக உள்ளது. அதுவும் மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறை 100 சதவீதத்துக்கும் மேல் உள்ளது.
தற்போது கரோனா சிகிச்சைக்கு 4 மடங்கு அதிகம் செவிலியர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் ஏற்கெனவே உள்ள செவி லியர்களை வைத்துக்கொண்டே சமாளிக்கப்படுகிறது. சென்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து மருத்து வர்கள், செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மதுரைக்குக் கூடுதல் மருத்துவர்கள், செவி லியர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவப் பணியாளர்கள் தேவை என்பதை தென்மாவட்ட அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள்தான் கேட்டுப் பெற வேண்டும்.
மதுரை போன்ற மருத்துவக் கல்லூரிகளில் 100 மருத்துவர்கள் பணிபுரிந்தால் 200 செவிலியர்கள், 200 பணியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால், மதுரையில் 100 மருத்துவர்கள் பணிபுரிந்தால் 90 செவிலியர்கள், 75 மருத்துவப் பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். நிலைமை தலைகீழாக உள்ள தாலேயே தற்போது கரோனா சிகிச்சையில் மதுரை அரசு மருத்துவமனை தடுமாறிக் கொண்டி ருக்கிறது. இறப்புகள் அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாகும்.
முதல்வரை திருப்திப்படுத்தவா?
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஏற்கெனவே இருக்கின்ற மருத்துவர்கள், செவி லியர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 600 கரோனா படுக்கைகளை மட்டுமே உருவாக்கியிருந்தால் தர மான சிகிச்சையும், கவனிப்பும் இருந்திருக்கும். ஆனால் 1,850 கரோனா படுக்கைகள் உரு வாக்கப்பட்டுள்ளதால் பிரசவ வார்டுகள், பொது வார்டுகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் கரோனா வார்டு களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதனால் மற்ற உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் தற்போது நடக்கவில்லை.
மக்கள் பார்வையில் கரோனா படுக்கைகளை அதிகப்படுத்தி உள்ளூர் அமைச்சர்களும், சுகா தாரத்துறை அதிகாரிகளும் முத ல்வரை திருப்திப்படுத்தலாம். ஆனால், சிகிச்சை கிடைக்காமல் பாதிக்கப்படுவது மக்கள்தான். தரமான கரோனா சிகிச்சைக்கு 100 படுக்கைளுக்கு 50 செவிலியர்கள், 32 மருத்துவர்கள் பணிபுரியும் வகையில் தற்காலிகமாக மருத்து வர்கள், செவிலியர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக கவனம் செலுத்தி பணியமர்த்த வேண்டும் என்று தெரிவித்தனர்.