

கருப்புப் பூஞ்சை நோய்த் தொற்று அதிகரித்து வரும் சூழலில் அதன் சிகிச்சைக்கான மருந்து உற்பத்தியை அதிகரிக்குமாறும் தட்டுப்பாட்டைப் போக்குமாறும் தூத்துக்குடி மக்களவை எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கும் அமைச்சர் சதானந்த கவுடாவுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
இது பற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலையில் ‘கருப்பு பூஞ்சை’ நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதற்கான மருந்துகளை அதிகளவில் உற்பத்தி செய்யவும் விநியோகம் செய்யவும் கோரி, இன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்தன் அவர்களுக்கும் மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு. சதானந்த கவுடா அவர்களுக்கும், மத்திய மருந்து துறை செயலாளர் திருமிகு. S. அபர்ணா அவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
சுகாதாரத் துறை அமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "மியூகோர்மைகோசிஸ் அல்லது கருப்புப் பூஞ்சை தொற்று அதிகரித்து வருவதை தாங்கள் அறிவீர்கள்.
அதுவும் குறிப்பாக கரோனாவிலிருந்து மீண்ட நோயாளிகள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஏற்கெனவே இதனை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக பட்டியலிட்டுள்ளது.
இந்நிலையில், இந்தத் தொற்று சிகிச்சைக்கான Liposomal, Amphotericin B or Amphotericin B போன்ற மருந்துகள் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது.
இனி எதிர்காலத்தில் இந்த மருந்துகளின் தேவை அதிகரிக்கலாம்.
ஆகையால், நாடு முழுவதும் இம்மருந்து விநியோகம் சீராக இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். அதுவும், குறிப்பாக இம்மருந்துகளுக்கு அதிக தட்டுப்பாடு நிலவும் தமிழகத்திற்கும் விநியோகத்தை அதிகரிக்க வேண்டுகிறேன்.
அதுமட்டுமல்லாது, இந்த மருந்து உற்பத்தியையும் அதிகரித்து உத்தரவிட வேண்டுகிறேன். இதனால், ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டாலும்கூட நிலைமையை எதிர்கொள்ள இயலும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.