

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்துக்காக மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்புக் குழு அமைக்க அத்திட்டத்தின் சிறப்பு அலுவலரான ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரத்தின்போது மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான மனுக்களைப் பெற்று, அம்மனுக்களின் மீது ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டுத் தீர்வு காணப்படும் என்கிற வாக்குறுதியை அளித்திருந்தார்.
முதல்வராக கடந்த மே 7 அன்று பதவியேற்ற பின்னர், தலைமைச் செயலகத்திற்குச் சென்று, கரோனா நிவாரண நிதி ரூ.4,000 அளிக்கும் விதமாக இந்த மாதமே ரூ.2,000 வழங்கும் அரசாணை, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தைச் செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி அதற்கு ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை நியமிக்கும் அரசாணை உள்ளிட்ட 5 அரசாணைகளில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
இதையடுத்து, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற புதிய துறையின் சிறப்பு அலுவலராக ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டார். இவர் முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் பணியாற்றி வருகிறார்.
தற்போது, இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதுவரை, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், தேனி ஆகிய ஆறு மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட 549 மனுக்களின் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் செயல்படத் தொடங்கியதைக் குறிக்கும் வகையில், 10 பயனாளிகளை நேரில் அழைத்து அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை நேற்று வழங்கினார்.
இந்நிலையில், இத்திட்டத்துக்காக மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்புக் குழு அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அத்திட்டத்தின் சிறப்பு அலுவலரான ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் இன்று (மே 20) உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவில், மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர் உள்ளிட்டோர் இடம்பெறுவர் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.