Last Updated : 20 May, 2021 07:37 PM

 

Published : 20 May 2021 07:37 PM
Last Updated : 20 May 2021 07:37 PM

கரோனா தடுப்புப் பணிகள்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை

கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். கரோனா சிகிச்சை மையங்களைப் பார்வையிட்டார்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து, கோவையில் கரோனா தொற்றுப் பரவலின் வேகம் அதிக அளவில் உள்ளது. தினமும் 3,200க்கும் மேற்பட்டோர், கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர், சுகாதாரத் துறையினருடன் இணைந்து, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகள், நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்ய, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 20) கோவைக்கு வந்தார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர், மதியம் 1.30 மணிக்கு, லட்சுமி மில் சந்திப்பு அருகேயுள்ள, கோவை அரசினர் விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரிகளுடன், கரோனா தடுப்புப் பணிகள், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கா.ராமச்சந்திரன், அர.சக்கரபாணி, முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், செந்தில்பாலாஜி, கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், அரசு மருத்துவமனை டீன் நிர்மலா, சுகாதாரத்துறை உயரதிகாரிகள், மாநகராட்சி, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை உயரதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இது தொடர்பாக, அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, "மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தொற்றுப் பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.

கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தி, தொற்றாளர்களைக் கண்டறிந்து, தொற்றுப் பரவலைத் தடுக்க உத்தரவிட்டார். தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மாவட்டத்தில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்துக் கேட்டறிந்த முதல்வர், தட்டுப்பாடு தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலவரம் குறித்துக் கேட்டறிந்த முதல்வர், அது தொடர்பான பணிகளை முழுமையாக முடிக்க அறிவுறுத்தினார்" என்றனர்.

கரோனா சிகிச்சை மையங்கள் ஆய்வு

அதைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த தொழில் அமைப்பினர், வர்த்தகத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான தங்களது தொகையை வழங்கினர்.

அதைத் தொடர்ந்து , மாலை கொடிசியாவில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அங்கு ஒரு அரங்கில் 250க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் செய்துவைக்கப்பட்டு இருந்தன.

அதைப் பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை, ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கைகளின் எண்ணிக்கை போன்றவை குறித்துக் கேட்டறிந்தார். மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் அவருக்கு அது தொடர்பான விவரங்களை எடுத்துக் கூறினார்.

அதை முடித்துவிட்டு, அருகேயுள்ள குமரகுரு கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அங்கு அமைக்கப்பட்டு இருந்த கரோனா சிகிச்சை மையத்தைத் தொடங்கி வைத்தார்.

இரண்டு அரங்குகளில் மொத்தம் 800 படுக்கை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இதனை ஆய்வு செய்த முதல்வர், அங்கு மேற்கொள்ளப்பட்ட வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வுகளின்போது, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட மேற்கண்ட 7 அமைச்சர்கள், கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன், மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன், மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர், சுகாதாரத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x