

‘‘பிரதமரின் தன்னிச்சையான முடிவால் தான் நாம் பல இன்னல்களை சந்தித்து வருகிறோம்,’’ என சிவகங்கை எம்.பி கார்த்திசிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
அவரும், மாங்குடி எம்எல்ஏவும் இன்று காரைக்குடி அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தனர். பிறகு கார்த்திசிதம்பரம் எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனாவில் இருந்து பாதுகாக்க கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் தொற்றுப் பரவலை தடுக்க முடியும். சமூகவலைதளங்களில் வரும் தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்.
கரோனா பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனைக்கு செல்ல தேவையில்லை. வீட்டிலேயே தனிப்படுத்தி கொள்ளலாம். ஆக்சிஜன் தேவைப்பட்டால் மட்டுமே மருத்துவமனைக்கு செல்லலாம். தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இருந்தும், நோயாளிகளை அனுமதிக்கவில்லை என்றாலோ, சிடி ஸ்கேனுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தாலோ என்னிடம் தெரிவிக்கலாம். நான் அரசு கவனத்திற்கு கொண்டு செல்வேன்.
அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு அதிகமாக தான் உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு மத்திய அரசின் தவறான நடவடிக்கை தான் காரணம். அவர்கள் 2 நிறுவனங்களுக்கு தான் தடுப்பூசி தயாரிக்க அனுமதி கொடுத்தனர். அதுபோக இந்தியாவில் தயாரித்த தடுப்பூசிகளையும் ஏற்றுமதி செய்துவிட்டனர். இதுபோன்ற பிரதமரின் தன்னிச்சையான முடிவால் தான் நாம் பல இன்னல்களை சந்தித்து வருகிறோம்.
இந்த சிக்கல்களுக்கும் மற்ற பாஜக தலைவர்களுக்கும் சம்பந்தமில்லை. ஏனென்றால் அவர்களுக்கு அதிகாரம் இல்லை. மோடி மீதான வெறுப்பு மக்களிடம் அதிகரித்து வருகிறது. மேலும் மத்திய அரசு தடுப்பூசிகளை தாமதப்படுத்துவதால், அந்தந்த மாநில அரசுகளே நேரடியாக கொள்முதல் செய்த நடவடிக்கை எடுத்து வருகின்றன.
பாதிப்பு குறையும் வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்புள்ளது, என்று கூறினார்.