Published : 20 May 2021 06:46 PM
Last Updated : 20 May 2021 06:46 PM

புதுவை 3 பாஜக எம்எல்ஏக்கள் நியமனத்துக்குத் தடை கோரிய வழக்கு: தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு

புதுச்சேரியில் 3 பாஜக எம்எல்ஏக்கள் நியமனத்தை எதிர்த்து, தடை கோரிய வழக்கில் வாதங்களைக் கேட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

புதுவை சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 10 தொகுதிகளைக் கைப்பற்றிய என்ஆர் காங்கிரஸ் - பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் 6 பேர் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி கடந்த 7ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வர் பொறுப்பை ரங்கசாமி ஏற்ற நிலையில், அமைச்சர்கள் யாரும் பொறுப்பேற்கவில்லை. கடந்த 10ஆம் தேதி கரோனா பாதித்து, சென்னை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி சட்டமன்றத்திற்கு கே.வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், ஆர்.பி.அசோக் பாபு ஆகிய மூவரை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரியும் இந்த உத்தரவை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், புதுச்சேரி கரிக்கலம்பாக்கம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெகநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்தார்.

அவரது மனுவில், “புதுவை முதல்வர் ரங்கசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அமைச்சரவையும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களும் பதவி ஏற்காத நிலையில், 3 நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களை நியமிக்க எந்த அவசரமும் இல்லை.

பதவியேற்கும் முன்பே, இந்த மூன்று எம்எல்ஏக்களும் தலைமைச் செயலாளர் மற்றும் துணைநிலை ஆளுநருடன் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். சட்டப்படி, பொருளாதார வல்லுநர்கள், அறிவியலாளர்கள், சீர்திருத்தவாதிகளை நியமன எம்எல்ஏக்களாக நியமிக்க வேண்டும். ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்களை நியமித்துள்ளது மோசமானது.

அரசியல் சாசன மரபுப்படி நியமன எம்எல்ஏக்கள் நியமனம் தொடர்பாக, மாநில அமைச்சரவை, துணைநிலை ஆளுநருக்குப் பரிந்துரையை வழங்கும். ஆளுநர் அதைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி நியமன உத்தரவு பிறப்பிக்கப்படும்.

இந்த நடைமுறை தற்போது பின்பற்றப்படாததால், 3 நியமன எம்எல்ஏக்கள் நியமனம் தொடர்பான உத்தரவைச் செல்லாது என அறிவித்து அதற்குத் தடை விதிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “அரசுப் பணியில் இருப்பவர்களை நியமன உறுப்பினர்களாக நியமிக்க மட்டுமே தடை உள்ளது. இவர்கள் நியமனத்தில் எந்த சட்டவிரோதமும் இல்லை” என மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணனும் வாதிட்டனர்.

அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்த மனுவை ஏற்கக் கூடாது என நியமன எம்எல்ஏக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x