Last Updated : 20 May, 2021 06:51 PM

 

Published : 20 May 2021 06:51 PM
Last Updated : 20 May 2021 06:51 PM

சேலத்தில் நடமாடும் கடைகளில் காய்கறிகள் விற்பனை: கரோனா பரவலைத் தடுக்க அறிமுகம்

சேலம் மாவட்டத்தில், காய்கறிக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்ட நிலையில், 11 உழவர் சந்தைகள் மூலமாக, 76 வாகனங்களில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காய்கறிகள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னரும், கரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விற்பனைக் கடைகள் தினமும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை திறப்பதற்கு அனுமதிக்கப்பட்ட போதிலும், மக்கள் தினமும் சமூக இடைவெளியின்றி காய்கறிகள் வாங்குவதற்குத் திரண்டு வந்தனர்.

எனவே, சேலம் மாவட்டத்தில் காய்கறிக் கடைகள் மூடப்படும் என்றும், மாற்று ஏற்பாடாக, வாகனங்கள் மூலம் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குக் காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படும் என்றும் சேலம் மாவட்டத்துக்கான கரோனா தொற்று தடுப்புப் பணி ஒருங்கிணைப்பாளரான அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று அறிவித்தார்.

இந்நிலையில், முதல் நாளான இன்று சேலத்தில் உழவர் சந்தைகள், காய்கறி சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதேபோல், மாவட்டம் முழுவதும் சந்தைகள், காய்கறிக் கடைகள் மூடப்பட்டிருந்தன. எனினும், மக்களுக்குக் காய்கறிகள் எளிதில் கிடைப்பதற்கு வசதியாக, உழவர் சந்தைகள் மூலம் நடமாடும் காய்கறி விற்பனைக் கடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

சேலத்தில் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, தாதாகாப்பட்டி, சூரமங்கலம் ஆகிய 4 உழவர் சந்தைகளுக்கும் என மொத்தம் 40 வாகனங்கள் மாநகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டன. அவற்றில் உழவர் சந்தை விவசாயிகளால் காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டு, மாநகராட்சியால் ஒதுக்கப்பட்ட இடங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.

இதேபோல், மேட்டூர் நகராட்சி சார்பில் 10 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, உழவர் சந்தை விவசாயிகளால் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. ஆத்தூர் நகராட்சி, எடப்பாடி நகராட்சி, தம்மம்பட்டி பேரூராட்சி மாவட்டத்தின் 11 உழவர் சந்தைகள் மூலமாக, மொத்தம் 76 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, மக்களுக்குத் தட்டுப்பாடின்றி காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.

இதுகுறித்து வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''சேலம் மாநகராட்சிப் பகுதியில் மட்டும் 53 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. மாவட்டம் முழுவதும் 76 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. முதல் நாள் என்பதால், வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அடுத்து வரும் நாட்களில் காய்கறிகள் விற்பனைக்குக் கூடுதல் வாகனங்கள் பயன்படுத்தப்படும்.

உழவர் சந்தை விவசாயிகளே காய்கறிகளை விற்பனை செய்வதால், காய்கறிகள் புதிதாகவும், உழவர் சந்தை விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. முதல் நாளில், 204 விவசாயிகள் பங்கேற்புடன் 58.83 டன் காய்கறிகள், 8.44 டன் பழங்கள் விற்பனை செய்யப்பட்டன. நடமாடும் காய்கறி விற்பனையின் மூலமாக மக்கள் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காய்கறிகளை வாங்கிப் பயனடைந்தனர்'' என்றனர்.

இதனிடையே, காய்கறிக் கடைகளைத் திறக்கக் கூடாது என்ற உத்தரவினை அறியாமல், சேலம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், வழக்கம் போல இன்று காலை காய்கறிக் கடைகள் திறக்கப்பட்டன. எனினும், அவை போலீஸார் அறிவுறுத்தலின் பேரில் மூடப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x