அம்மையநாயக்கனூர் அருகேயுள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு தங்களது ஒரு மாத ஊதியத்தில் மளிகைபொருட்களை வழங்கிய மனிதநேயமிக்க போலீஸ் தம்பதி.
அம்மையநாயக்கனூர் அருகேயுள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு தங்களது ஒரு மாத ஊதியத்தில் மளிகைபொருட்களை வழங்கிய மனிதநேயமிக்க போலீஸ் தம்பதி.

ஆதரவற்றவர்களுக்கு தங்களது ஒரு மாத ஊதியத்தில் அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கிய போலீஸ் தம்பதி: திண்டுக்கல் டிஐஜி., முத்துச்சாமி பாராட்டு 

Published on

கொடைரோடு அருகே காவல்துறை தம்பதியினர் தங்களின் ஒரு மாத ஊதியத்தில், ஆதரவற்ற முதியோர் காப்பகத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை வழங்கியுள்ளனர்.

இவர்களின் சேவையை திண்டுக்கல் டி.ஐ.ஜி., முத்துச்சாமி பாராட்டினர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிவர் அன்பழகன். இவரது மனைவி செல்வரத்தினம் விளாம்பட்டி காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிகிறார்.

வழக்கமாக சிறு சிறு உதவிகள் செய்துவரும் இந்த தம்பதிகள், கரோனா பாதிப்பு, ஊரடங்கு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடிவுசெய்தனர். இருவரும் பேசி, தங்களது ஒரு மாத ஊதியத்தை இதற்காக செலவழிக்க முன்வந்தனர்.

இதையடுத்து அம்மையநாயக்கனூர் அருகேயுள்ள முதியோர் காப்பகம், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் காப்பகம் ஆகியவற்றிற்கு இருவரும் தங்களது ஊதிய தொகையில் இருந்து ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மூடை உள்ளிட்ட மளிகைபொருட்கள், காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள், பெட்ஷீட் உள்ளிட்டவற்றை வாங்கிச்சென்று நேரடியாக வழங்கினர்.

காவலர் தம்பதிகளின் மனிதாபிமானமிக்க செயல் அனைவரின் பாராட்டுதலையும் பெற்றது. இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் டி.ஐ.ஜி., முத்துச்சாமி போலீஸ் மைக்கில் தான் பேசுவதை அனைவரையும் கவனிக்கச்செய்து இவர்களுக்கு பாராட்டு தெரிவித்து பேசுகையில், காவல்துறையில் பணிபுரியும் அன்பழகன், செல்வரத்தினம் தம்பதியால் திண்டுக்கல் மாவட்ட காவல்துறைக்கு பெருமைகிடைத்துள்ளது. இவர்கள் ஏற்கனவே பொது சேவையில் ஈடுபடுவதை அறிந்தேன்.

அவர்களுக்கு குழந்தை இல்லாததால் சேவை செய்கின்றனரோ என நினைத்தேன். ஆனால் விசாரித்தபோது அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். குழந்தைகளின் செலவுகளையும் பார்த்துக்கொண்டு வெளியில் உதவுவதற்கு பெரிய மனம் வேண்டும். அவர்களை விட பெரிய பதவியில் இருக்கும் நான் இதுபோன்று செய்கிறேனா என்றால் இல்லை.

நீங்கள் உங்களுடைய சம்பளத்தில் இருந்து கொடுக்கிறீர்கள். கணவர் கொடுக்க ஆசைப்பட்டால் மனைவி விடமாட்டார். மனைவி கொடுக்க நினைத்தால் கணவருக்கு மாற்றுகருத்து இருக்கும். ஆனால் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து முழுமனதுடன் உதவிசெய்வதற்கு திண்டுக்கல் சரக காவல்துறை சார்பில் வணக்கங்கள்.

திண்டுக்கல் மாவட்ட போலீஸாருக்கு நீங்கள் பெருமை சேர்த்துள்ளீர்கள், இருவருக்கும் வாழ்த்துக்கள், என்றார். மேலும் அனைத்து டி.எஸ்.பி.,களும் இந்த காவல் தம்பதிகளின் அலைபேசி எண்ணை வாங்கி அவர்களுடன் பேசி வாழ்த்துதெரிவியுங்கள், இது எனது உத்தரவு அல்ல வேண்டுகோள், என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in