

பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம் பழையபடி தொடர வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (மே 20) வெளியிட்ட அறிக்கை:
"மனித வளம் மற்றும் திறன் பேணுவதில் பள்ளிக் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆரம்பக் கல்வி தொடங்கி, பள்ளிக் கல்வி முடிக்கும் வரையிலான பருவம் மிக முக்கியமானது. பள்ளிக் கல்வி போதிப்பதில் செறிவான, நீண்ட கால அனுபவம் பெற்றவர்கள், நிர்வாகப் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, பல படிகளைத் தாண்டி இயக்குநர்களாகப் பணியாற்றுகிறார்கள்.
இதனால் உருவாகியுள்ள ஆக்கபூர்வமான நடைமுறையை வெறும் நிர்வாகப் பணியிடமாகவும், அதிகார மையமாகவும் மாற்றுவது அடிப்படையில் தவறானதாகும். ஆனால், இதுபற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல் இந்திய ஆட்சிப் பணி அலுவலரை நியமித்து, இயக்குநர் பணியிடத்தை ஆணையராக்கும் திட்டத்தை முந்தைய அரசு அறிவித்தது.
அண்மையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை நிராகரித்து, துறைச் செயலாளர் மூலம் மத்திய அரசு தனது புதிய கல்விக் கொள்கையைத் திணிக்கும் அத்துமீறலில் ஈடுபட்டதைக் கருத்தில் கொண்டால் பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடத்தின் முக்கியத்துவத்தை உணர முடியும்.
கல்வியாளர்களும், ஆசிரியர், மாணவர் அமைப்புகளும் வலியுறுத்தி வரும் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடத்தை ரத்து செய்யும் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்து, அதனைக் கைவிட வேண்டும் எனவும், இயக்குநர் பணியிடமும், பணி நியமன முறையும் பழையபடி தொடர வேண்டும் என்றும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு, தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது".
இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.