மூன்றாம் பாலினத்தவருக்கு ரூ.4000 நிவாரணத் தொகை வழங்குவது குறித்துப் பரிசீலனை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

மூன்றாம் பாலினத்தவருக்கு ரூ.4000 நிவாரணத் தொகை வழங்குவது குறித்துப் பரிசீலனை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
Updated on
1 min read

தமிழக அரசின் கரோனா நிவாரண நிதியுதவி 4,000 ரூபாயை மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வழங்குவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ்பானு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், “கரோனா பேரிடர் காலத்தில் அரிசி அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவியாக 4,000 ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் முதல் தவணையாக 2,000 ரூபாய் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் இந்த உதவித்தொகையை வழங்க உத்தரவிட வேண்டும். கரோனா பேரிடர் காலத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள், தங்கள் மருத்துவத் தேவைகளையும், வாழ்வாதாரத்தையும் பூர்த்தி செய்யக் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் 50,000 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளபோதும், 11,499 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை தெரிவித்துள்ளது. 2,541 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மட்டுமே ரேஷன் அட்டைகள் உள்ளன. கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவியபோது ரேஷன் அட்டைதாரர்கள் மட்டுமல்லாமல், மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

கடந்த இரு ஆண்டுகளாக மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்படவில்லை. தற்போது 6,553 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மட்டுமே அடையாள அட்டை உள்ளது. ரேஷன் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் 4,000 ரூபாய் நிவாரண உதவியை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுவில் கூறப்பட்டுள்ள கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in