

பொதுமக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் நலன்கருதி வீட்டிலேயே இருந்தால் கரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்தமுடியும், என தென்மண்டல ஐ.ஜி., அன்பு தெரிவித்தார்.
தென் மண்டல காவல்துறை ஐஜி.,யாக புதிதாக பொறுப்பேற்ற அன்பு, இன்று திண்டுக்கல்லில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.
திண்டுக்கல் புறவழி சாலை அருகே இயங்கிவரும் தற்காலிக காய்கறி மார்க்கெட்டை பார்வையிட்டு கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என ஆய்வு செய்தார்.
தொடர்ந்து நாளை முதல் திண்டுக்கல் பேருந்துநிலையத்தில் செயல்படவுள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட் குறித்து திண்டுக்கல் எஸ்.பி., ரவளிபிரியா ஆகியோருடன் பேருந்துநிலையம் பகுதியில் கலந்தாலோசித்தார்.
தென் மண்டல ஐ.ஜி., அன்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது: திண்டுக்கல் புறவழிச்சாலை அருகே இயங்கும் காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் போதிய விழிப்புணர்வு இன்றி கூடுவதால் கரோனா பரவும் அபாயம் உள்ளது.
இதை தவிர்க்க லாரிப்பேட்டை, பேருந்துநிலையம், ஐ.டி.ஐ., வளாகம், நாகல்நகர் வாரச்சந்தை ஆகிய நான்கு இடங்களில் காய்கறி மார்க்கெட்கள் இன்று முதல் செயல்படவுள்ளது.
அந்தந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆங்காங்கே காய்கறிகளை வாங்கிக்கொள்ளலாம்.
பொதுமக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் நலன்கருதி வீட்டிலேயே இருந்தால் கரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்தமுடியும்.
தேவையில்லாமல் வெளியே சுற்றி வரும் நபர்களின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் நலன் கருதி வீட்டிலேயே இருந்தால் நோய் தொற்றிலிருந்து தப்பிக்கலாம், என்றார்.