மே 24-ல் ஊரடங்கு நிறைவு: கரோனா தடுப்பு ஆலோசனைக் குழுவுடன் மே 22-ல் முதல்வர் ஆலோசனை
மே 24 அன்று ஊரடங்கு முடிவடைய உள்ளதை அடுத்து கரோனா தடுப்பு ஆலோசனைக் குழுவாக தமிழக சட்டப்பேரவைக் கட்சிக் குழு உறுப்பினர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இந்தக் கூட்டத்தில் ஊரடங்கு குறித்தும் ஆலோசனை நடக்கும் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருந்துகளின் தேவை, படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர் தேவை உள்ளிட்டவை குறித்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், அதனால் தொற்று எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தொற்றுப் பரவல் மேலும் கூடியதை அடுத்து இரவு நேர ஊரடங்கு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டன. ஆனாலும் பொதுமக்கள் அலட்சியம் காட்டியதால் 2 வார முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
கரோனா குறித்து முதல்வர் தலைமையில் சட்டப்பேரவை அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் திமுகவிலிருந்து மருத்துவர் எழிலன், அதிமுகவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உள்ளனர். இந்தக் குழு தற்போதுள்ள சூழ்நிலை குறித்து முதல்வருக்கு ஆலோசனை அளிக்கும்.
இந்நிலையில் வரும் 22ஆம் தேதி இக்குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இந்தக் கூட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள், தமிழகம் சந்திக்கும் கரோனா சம்பந்தப்பட்ட மற்ற பிரச்சினைகள் குறித்து அலசப்படும் எனத் தெரிகிறது.
