

முதுமலையில் பிறந்த இரட்டை யானைகள் 'விஜய்' மற்றும் 'சுஜய்', தங்கள் 50-வது பிறந்த நாளை பூர்த்தி செய்துள்ளன.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. ஆசியாவிலேயே பெரிய யானைகள் வளர்ப்பு முகாம் இதுதான். வனத்தில் தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டிகள், ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள் அடக்கி ஆளப்பட்டு, வளர்ப்பு யானைகளாக வளர்க்கப்படுகின்றன.
தற்போது 27 வளர்ப்பு யானைகளை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர். இவற்றில், 'பாமா', 'இந்தர்', 'அண்ணா' மற்றும் 'காமாட்சி' ஆகிய நான்கு யானைகள் 60 வயதை எட்டியதை அடுத்து, அவற்றுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இவற்றில், 2006-ம் ஆண்டு முதுமலைக்கு உட்பட்ட கார்குடி வனத்தில் 3 மாதக் குட்டியாக தெப்பக்காடு முகாமுக்குக் கொண்டு வரப்பட்டது 'மசினி'. 9 ஆண்டுகள் யானைகள் முகாமில் வளர்ந்தது. மிகவும் அமைதியாக, சொன்ன பேச்சைத் தட்டாமல் வளர்ந்த யானை, சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு 2015-ம் ஆண்டு அனுப்பப்பட்டது. இந்நிலையில், மீண்டும் தாய் வீட்டுக்குத் திரும்பியுள்ளது 'மசினி'.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சரகத்தில் அய்யூர் பகுதியில் தாயிடமிருந்து பிரிந்த யானைக் குட்டி 'ரகு' என்ற பெயருடன் வளர்ந்து வருகிறது.
'மூர்த்தி' எனும் தந்தமில்லாத 'மக்னா' யானை கேரளாவில் 17 பேரைக் கொன்றது. இதனால் இந்த யானையை சுட்டுக்கொல்ல கேரள வனத்துறை உத்தரவிட்டது. ஆனால், அப்போது முதுமலை சரணாலயக் காப்பாளராக இருந்த உதயன் தலைமையில் வனத்துறையினர், யானையைப் பிடித்து முதுமலை கொண்டு வந்தனர். 'மூர்த்தி' எனப் பெயர் சூட்டி வளர்க்கப்பட்டு வருகிறது.
இதேபோல, 2016-ம் ஆண்டு பந்தலூர் அருகே மூவரைக் கொன்ற ஆட்கொல்லி யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, முதுமலை கொண்டு வரப்பட்டது. கராலில் அடைக்கப்பட்டு, தற்போது வளர்ப்பு யானையாக மாறியுள்ளது. 'சுள்ளிக் கொம்பன்' என்றழைக்கப்பட்ட இந்த யானைக்கு 'சீனிவாசன்' என வனத்துறையினர் பெயரிட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சத்தியமங்கலம் சரகத்தில் தாயிடமிருந்து பிரிந்த 3 மாதக் குட்டியை, அதன் கூட்டத்துடன் இணைக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், யானைக்கூட்டம் குட்டியை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், குட்டி தனித்து விடப்பட்டதால், குட்டி யானை முதுமலை புலிகள் காப்பகத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
தாயைப் பிரிந்து சோர்வாக இருந்து குட்டி யானைக்கு முதுமலையில் வனத்துறையினர் உரிய சிகிச்சை அளித்தனர். கடந்த ஓராண்டாக முதுமலையில் பாகன் பொம்மனின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வரும் இந்தக் குட்டி யானைக்கு வனத்துறையினர் 'பொம்மி' எனப் பெயர் சூட்டியுள்ளனர்.
பொன்விழா கண்ட இரட்டையர்கள்
முகாமில் உள்ள ஒவ்வொரு யானைக்கும் ஒரு வரலாறு உள்ள நிலையில், இந்த முகாமிலேயே பிறந்த இரட்டையர்கள் இன்று (மே 20) பொன்விழாவை பூர்த்தி செய்துள்ளன. இரட்டையர்களான 'விஜய்', 'சுஜய்' பயிற்சி பெற்று கும்கிகளாக உருமாறியுள்ளன. இவை நீலகிரி மற்றும் கோவையில் காட்டு யானைகளை விரட்டவும், பிடிக்கவும் பணியாற்றி வருகின்றன.
இந்நிலையில், 'சுஜய்' கடந்த 2017-ம் ஆண்டு கோவை சாடிவயல் முகாமில், காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டபோது, காட்டு யானைகள் தாக்கியதில், தனது ஒரு தந்தத்தை இழந்தது. கோவையை அச்சுறுத்தி வந்த 'விநாயகா', 'சின்னதம்பி' மற்றும் 'சங்கர்' ஆகிய யானைகளைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டது.
இந்த இரட்டையர்கள், முகாமில் 'தேவகி' என்ற யானைக்கு கடந்த 1971-ம் ஆண்டு மே மாதம் 20-ம் தேதி பிறந்தன. இன்று, இந்த இரட்டையர்கள் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளன.