Published : 20 May 2021 03:50 PM
Last Updated : 20 May 2021 03:50 PM

சாலையில் மயங்கி விழுந்த மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற இளம்பெண்: முதல்வர் நேரில் அழைத்து பாராட்டு

சேலத்தில் மருத்துவமனைக்கு மகனுடன் சென்ற மூதாட்டி சாலையில் மயங்கி விழ அவரை மீட்க யாரும் முன்வராத நிலையில் இளையராணி என்கிற இளம்பெண் மீட்டு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். அவரது மனிதாபிமான சேவையை பாராட்டி முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.

சேலம் சேலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மூதாட்டிக்கு திடீர் உடல் நலன் பாதிப்பு ஏற்பட்டது. தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்றார். செல்லும் வழியில் மூச்சுத்திணறல் காரணமாக மயங்கி சாலையில் விழுந்தார், கோவிட் தொற்று காரணமாக அவரை மீட்க யாரும் முன் வரவில்லை.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற சாத்தூர் கிராமத்தைச் சார்ந்த இளையராணி என்ற இளம்பெண் மூதாட்டியை தூக்கி இருசக்கர வாகத்தில் தூக்கி வைத்து பிடித்துக்கொண்டு மருத்துவமனையில் கொண்டுச் சென்று சேர்த்தார். ஆனாலும் மூதாட்டி உயிரிழந்தார். அவரது செயல் காணொலியாக சமூக வலைதளங்களில் வைரலானது.

இதை கவனத்தில் கொண்ட முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சேலம் சென்ற போது இளம்பெண் இளையராணியை நேரில் வரவழைத்து பாராட்டி பரிசளித்தார். அப்போது அவர் தனது பெற்றோருடன் ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வமாக இருப்பதாக கூறினார். முதல்வர் அதற்கு ஒப்புக்கொன்டு அவர்களை வரவழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது ட்விட்டர் பதிவு வருமாறு:
“வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்த மூதாட்டிக்கு #COVID19 அச்சம் காரணமாக யாருமே உதவ முன்வராத நிலையில் இளையராணி என்ற இளம்பெண் மனிதநேயத்துடன் உதவியதை அறிந்து நெகிழ்ந்து போனேன்.

இன்று சேலம் சென்றிருந்த போது இளையராணியை சந்தித்து மனமார பாராட்டினேன். இளைய தலைமுறை நம்பிக்கையூட்டுகிறது”.

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x