

சில மாவட்டங்களில் கரோனா தொற்று பரவல் கவலையளிப்பதாக, தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை, டிஎம்எஸ் வளாகத்தில் இன்று (மே 20) ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
"தமிழ்நாட்டில் மட்டும்தான் அதிகமாக தொற்று எண்ணிக்கை வருவதாக செய்திகள் வருகின்றன. மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கரோனா உச்சம் தொட்டுள்ளது. கேரளா மக்கள்தொகை தமிழக மக்கள்தொகையில் பாதியைக்கொண்டது. கர்நாடகா நம்மைவிட குறைவான மக்கள்தொகையைக் கொண்டது.
தமிழகத்தில் கரோனா தொற்றின் எண்ணிக்கை குறைகிறது. இருப்பினும், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திருச்சி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் கவலையளிக்கின்றன. சாதாரண ஊர்களிலும் கண்காணிக்க வேண்டியுள்ளது.
இந்த ஊரடங்கை நாம் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஊரடங்கு என்றால் அதன் இரண்டாம் பாகத்தில்தான் அதன் பலன் கிடைக்கும். பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. கும்பலாக இருக்கும் எந்த இடத்தையும் தவிருங்கள். அனுமதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் கூட கும்பல் இருந்தால் கடைகளுக்கு செல்லாதீர்கள்.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை மதிக்க வேண்டும். அங்கு வெளியிலிருந்து உள்ளே செல்லக்கூடாது. உள்ளே இருந்து வெளியே வரக்கூடாது. இந்த விஷயத்தில் இன்னும் ஒத்துழைப்பு தேவை. தொற்று ஏறிதான் இறங்கும். இப்போது ஒரு சில இடங்களில் தொற்று குறைவதற்கான அறிகுறி தெரிகிறது. சில மாவட்டங்களில் தெரியவில்லை. இந்த மாவட்டங்களில் கடுமையான களப்பணி செய்ய வேண்டும்".
இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.