

புதுச்சேரியில் ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்படும் நிலையில் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க புதுச்சேரி முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.சிவா வலியுறுத்தியுள்ளார்.
காரைக்கால் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.சிவா இன்று(மே 20) காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மாவை, ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது, " திருநள்ளாறு பகுதியில் கரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் அங்கு மாவட்ட நிர்வாகம் தனிக் கவனம் செலுத்தி, தொற்றுப் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
திருநள்ளாறு சமுதாய நலவழி மையத்தில் கரோனா கேர் சென்டர் ஒன்று அமைக்கப்பட வேண்டும். ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொண்டு சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஒரே ஒரு மையத்தில் மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. இந்த மையத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நடமாடும் பரிசோதனை மையத்தின் மூலம் அனைத்துக் கிராமப் பகுதிகளுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் மூலம் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட வேண்டும்.
காரைக்காலில் ஆயுஷ் மருத்துவமனை தொடங்கப்பட வேண்டும். இது தொடர்பாக புதுச்சேரி முதல்வர், சுகாதாரத்துறை செயலர் ஆகியோரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போதைய ஊரடங்கு சூழலில் மக்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நகர மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழு பெண்களிடம் வங்கிகள், மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் கடன் தொகைகளை வசூலிக்க நெருக்கடி கொடுப்பதை தடுக்கும் வகையில் , மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு வங்கிகள், நிதி நிறுவனங்களை அழைத்துப் பேசி உரிய முடிவு எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டதற்கு, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
தற்போது சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் அரிசி வழங்க வேண்டும் எனவும் ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு ஒரு ரேஷன் அட்டைக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் முதல்வரிடம் வலியுறுத்த வேண்டும் என எதிர்பார்த்துள்ளோம். முதல்வரை சந்தித்துப் பேசக்கூடிய வாய்ப்பே கிடைக்கவில்லை" என்றார்.