Published : 20 May 2021 03:09 PM
Last Updated : 20 May 2021 03:09 PM

வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறும்; 6 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

தென்மேற்குப் பருவமழை நாளை உருவாகிறது. வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வெப்பச் சலனம் காரணமாக மே 20 அன்று சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.

மே 21 அன்று மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதியில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

மே 22 அன்று மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

மே 23, 24 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மேற்கு மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு

கச்சிராயபாளையம் (கள்ளக்குறிச்சி) 10 செ.மீ., திருச்சி டவுன் 7 செ.மீ., வீரகனூர் (சேலம்), நீலகிரி, திருப்பத்தூர், சிவகங்கை, குழித்துறை (கன்னியாகுமரி), பெரம்பலூர், கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி) தலா 5 செ.மீ., நத்தம் (திண்டுக்கல்) திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) தலா 4 செ.மீ., மௌலத்தூர் (வேலூர்) பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 3 செ.மீ., டேனிஷ்பேட்டை (சேலம்), ஆம்பூர் (திருப்பத்தூர்) புளிப்பாட்டி (மதுரை) தலா 2 செ.மீ., விராலிமலை (புதுக்கோட்டை) கூடலூர் (தேனி) எருமைப்பட்டி (நாமக்கல்) வலங்கைமான் (திருவாரூர்) 1 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மே 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தமிழக கடலோரப் பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தென்மேற்குப் பருவமழை

தென்மேற்குப் பருவமழை தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக உருவாக வாய்ப்பு

மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வரும் மே 22 அன்று ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரும்”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x