விவசாயிகளுக்குக் கிடங்கு வசதி, பொருளீட்டுக் கடன் வசதி: மாவட்ட வாரியாக உதவி எண்கள் அறிவிப்பு

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
2 min read

தமிழகத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ஊரடங்கு காலத்திலும் செயல்பட்டு வருகின்றன எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 20) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழகத்தில் கரோனாவினால் ஏற்பட்ட 2-வது அலை தாக்குதலைக் கட்டுப்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்சினைகளைக் களைந்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் ஊரடங்கு காலத்திலும் செயல்பட்டு வருகின்றன. எனவே, விவசாயிகள் கீழ்க்கண்ட வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விளைபொருட்களைப் பாதுகாத்துச் சேமித்திட கிடங்கு வசதி

மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நவீன சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டு, அவை பயன்பாட்டில் இருந்து வருகின்றன. விவசாயிகள் விளைபொருட்களை இக்கிடங்குகளில் 180 நாட்கள் வரை வைத்துப் பாதுகாத்திடலாம். அதிக விலை கிடைக்கப் பெறும் காலங்களில் விளைபொருட்களைக் கிடங்கிலிருந்து எடுத்து விற்பனை செய்திடலாம்.

பொருளீட்டுக் கடன் வசதி

கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விளைபொருட்களை விவசாயிகள் அடமானத்தின் பேரில் அதிகபட்சம் 75 சதவீத சந்தை மதிப்பு அல்லது ரூபாய் 3 லட்சம் இவற்றில் எதுகுறைவோ அந்த அளவுக்கு பொருளீட்டுக் கடனாகப் பெற்றிடலாம். கடனுக்கான காலஅளவு 180 நாட்கள் ஆகும். இதற்கான வட்டி 5% ஆகும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பாதுகாத்திட குளிர்சாதனக் கிடங்கு வசதி

பழங்கள் மற்றும் காய்கறி சாகுபடி செய்திடும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் குளிர்சாதனக்கிடங்கு வசதிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. விரைவில் அழுகக்கூடிய பொருட்களை இக்கிடங்குகளில் வைத்துப் பாதுகாத்திடலாம். மேலும், விநியோகத் தொடர் மேலாண்மை திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையங்களிலும் குளிர்சாதனக் கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகள் இதனைப் பயன்படுத்தி விளைபொருட்களைப் பாதுகாத்திடலாம்.

விவசாயிகள் தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்திட மாநில அளவில் கீழ்க்கண்ட தொலைபேசியைத் தொடர்பு கொள்ளவும்.

044 22253884

மாவட்ட அளவில் விளைபொருட்களை விற்பனை செய்தல் மற்றும் சேமித்து வைத்தல் போன்றவைக்கு வேளாண்மை விற்பனைத் துறையின் விற்பனைக் குழு செயலாளர் / வேளாண்மை துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) தொடர்புகொண்டு பயன்பெறலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in