கருப்பு பூஞ்சை நோய் குறித்து அச்சம் வேண்டாம்; தமிழகத்தில் 9 பேர் பாதிப்பு; உயிரிழப்பு இல்லை: ராதாகிருஷ்ணன் பேட்டி

ராதாகிருஷ்ணன்: கோப்புப்படம்
ராதாகிருஷ்ணன்: கோப்புப்படம்
Updated on
1 min read

கருப்பு பூஞ்சை நோய் குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம் என, தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை, டிஎம்எஸ் வளாகத்தில் இன்று (மே 20) ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"கருப்பு பூஞ்சை (மியூகோர்மைகோசிஸ்) நோய் குறித்து தேவையற்ற பீதி அனைவரது மத்தியிலும் வந்திருக்கிறது. இதுகுறித்து தேவையற்ற பீதி இருக்க வேண்டியதில்லை. இது ஏற்கெனவே இருக்கக்கூடியதுதான்.

கோவிட் தொற்றால் வரக்கூடிய புதிய வகையிலான, அதிகமாகப் பரவக்கூடியது என்பது போன்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்கள் உலா வருகின்றன. பதற்றம் வேண்டாம். இந்த பூஞ்சை தொற்று பல ஆண்டுகளாக இருக்கக்கூடியது. கோவிட் தொற்றுக்கு முன்பிருந்தே இந்த பூஞ்சை தொற்று இருக்கிறது.

கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோய் உள்ளவர்கள், ஸ்டீராய்டு எடுத்துக் கொள்பவர்கள், ஐசியூவில் பல நாட்களாக இருக்கக்கூடியவர்கள் உள்ளிட்டோருக்கு இந்தத் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர்.

ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கோவிட் தொற்று உள்ளவர்களில் இதன் தாக்கம் அதிகம் இருப்பதாக செய்தி வந்தது. இதனை 'அறிவிக்கப்பட வேண்டிய நோயாக' பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன் அர்த்தம், இந்த நோய் எங்காவது யாருக்காவது வந்தால் அதனைப் பொது சுகாதாரத்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இது குணப்படுத்தப்படக்கூடிய நோய். சைனஸ் போன்ற அறிகுறிகள் வந்தவுடனேயே உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றால் இதனை குணப்படுத்த முடியும்.

இந்த பாதிப்பு குறித்துக் கண்டறிய 10 பேர் கொண்ட தனிக்குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. தமிழகத்தில் நீரிழிவு நோயாளிகள் 7 பேர் உள்ளிட்ட 9 நபர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நலமுடன் உள்ளனர். சிகிச்சை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் இதனால் இதுவரை உயிரிழப்பு இல்லை. சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் உள்ளன".

இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in